சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்று உலகம்
சிறப்பாய் உணர வைத்தநாடு தமிழ்நாடு!
வில்லில் வீரம் காட்டுவதில் தன்னைப்போல
இணையாய் நாடு இல்லாத உயர்நாடு!
கல்லில் சிற்பம் வடிப்பதிலே உலகத்தின்
கண்களைக் கவர்ந்து வியப்பினிலே ஆழ்த்தும் நாடு!
நெல்லில் விளைச்சல் தருவதிலே அன்றுமுதல்
நெடும்புகழ்க் கொண்ட வயல்கள்நிறை தமிழ்நாடு!
சங்கம் வைத்து தமிழ்மொழியைக் கண்போல
சிறப்பாய்க் காத்து செம்மொழிவளம் கொண்ட நாடு!
பங்கம் இல்லா மூவேந்தர் ஆட்சியிலே
பசுமை தழைத்து பண்பாட்டில் உயர்ந்தநாடு!
தங்கம் போலே மின்னுகின்ற நெல் மணிகள்
தன்மேனி எங்கும் கொழித்திடவே சிரிக்கும்நாடு!
வங்கக் கடலின் மடிமீதில் கலம்சென்று
வணிகம் வளர்த்து திரவியங்கள் சேர்த்தநாடு!
அகத்தியன் வளர்த்த தெய்வமொழி ஓங்கிடவே
இலக்கண இலக்கியம் அளவின்று யாத்தநாடு!
செகத்தில் யாவரும் விரும்புகின்ற மொழியாக
செந்தமிழ் ஒன்றே எனச்சொல்லும் தனித்தநாடு!
அகமும் புறமும் செம்மையுற இலக்கியங்கள்
அழகுற தந்து தமிழ்மொழியால் செழித்தநாடு!
பகைவர் திரண்டு அலைகடலென வந்தாலும்
பொருது வென்று தலைநிமிர்ந்த தமிழ்நாடு!
த.ஹேமாவதி
கோளூர்