விண்ணகத்து வயல்வெளியில் வெளிச்சப் பயிர் விளைய
மண்ணகத்தில் மகிழ்வாக மாபொழுது விடியலாக
கண்ணோக்கும் திசையெல்லாம் கதிரவக் கதிர்பொழிய
கொண்டதொரு ஞாயிறென குணமுடன் சிறந்திடவே..
காட்டுகின்ற வெளிச்சத்தீ கற்பனையை உடுத்திநிற்க
தேட்டமுடன் தேவைகளும் தேடியிங்கு வந்துநிற்க
வாட்டமில்லாப் பொழுதாகி வசந்தத்தேர் பவனிவர
நாட்டமுடன் ஞாயிறிங்கே நற்பொழுதாய் விடிந்ததுவே..
மனவிருளை விரட்டிடவே மலர்ந்திட்ட விடியலுக்குள்
கனவுடனே கண்ணோக்கி கண்வழியே கருத்துரைக்க
நனவான நற்பொழுதாய் நாடிவந்த சேதிக்குள்
சினமில்லா சிகரமாகி சிந்தை மலர் குளிர்ந்ததுவே..
விண்ணகத்து வாசலுக்குள் விளைந்திட்ட விடியல்பூ
கண்ணோக்கி காதல்மொழி கனிவுடன் பேசிடவே
மண்வயலில் மகிழ்ந்தாடும் மனக்குவியல் மாமருந்தில்
எண்ணமெல்லாம் எழுந்திங்கே எழிலாகி நிற்கிறதே..
செலவில்லா வெளிச்சத்தை சேவையென தந்தவனும்
அளவில்லா அன்போடு அகமனதை விரித்திடவே
நிலையில்லா மனிதத்துள் நின்றாடும் கடன்போல
உலவிவரும் ஒப்பனைக்குள் ஓர் நாளைத் தந்தானே..
பணியுண்டு பலவாறு.. பகல்பொழுதின் வரலாறு
அணியணியாய் திரண்டிருக்கும் அளவில்லா பணியோடு
பிணியில்லாப் பெருந்தவமாய் பெற்றிட்ட வரவுக்குள்
அணியான வேள்வித்தீ..ஆசைப்பட்டு வருகிறதோ..
விடுப்பான தினமென்று வெறுப்பாகச் சொன்னாரோ
தடுத்திடவே முடியாத தமிழ்போல ஆழமிங்கே.
உடுப்பாகும் பணியூடே ஓய்வில்லா ஞாயிறுக்குள்
விடுப்பேதும் தெரியலையே..விளங்கிடவே
நீ வந்துதிப்பாய்
*பரணி சுப.சேகர்