Header Ads Widget

Responsive Advertisement

சும்மாடு



ஐந்து நாட்கள் பள்ளிசென்று பாடத்தைப் படித்துவிட்டு
இரண்டு நாட்கள் கடைகளிலே வேலையும் செய்து கொண்டு
குடும்பபாரம் பங்குபோடும் குழந்தைகள் சொல்கின்றார்
சுமைதாங்கி அல்ல நான் சும்மாடு.

பொழுது போக்காம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவிட்டு
பொழுதோடும் வீட்டுவேலை
பலவற்றைப் பகிர்ந்து கொண்டு
பெற்றோரைத் துணைக்கின்ற பிள்ளைகள்
சொல்கின்றார்
சுமைதாங்கி அல்ல நான் சும்மாடு.

நலிந்துபோன நட்பதனின் கலைந்து போன கனவுகளை
சிதைந்துபோக விடாமல் சிறக்க உதவி செய்து விட்டு
மறக்கவே முடியாத மாண்பினனாய் நிற்கின்ற
நட்புவந்து துளிகூடக் கர்வமின்றிச் சொல்கிறது
சுமைதாங்கி அல்லநான் சும்மாடு.

அழிந்து போன வளத்தையெல்லாம் தளர்ந்துபோன மனத்தோடும்
இழந்து விட்ட சொந்தத்தை வழிந்து நிற்கும் கண்ணீரோடும்
நினைத்து நின்ற மனிதருக்கு துணையாக வந்துநின்று
கேட்காமலே உதவி நிற்கும் உள்ளமது
சொல்கிறது சுமைதாங்கி அல்ல நான் சும்மாடு.

சுமக்கின்ற பாரத்தின் கடினமது தெரியாது
வலிவந்து சிரத்தினிலே இறங்காமல் காத்து நின்று
சுமைதாங்கி நிற்பவரின் சுமைக்கு ஒரு கைகொடுத்து
துணை உனக்குத் தேவையெனில் உறுதுணையாய் நானிருப்பேன்
என்று நிற்கும் அனைவருமே சுமை தாங்கும் சும்மாடு.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*