Header Ads Widget

Responsive Advertisement

இந்தியா இப்போது முன்னேறிவிட்டது..!



அப்போதெல்லாம்
வண்டியில் பெட்ரோல் திருடினார்கள்...
இப்போது வண்டியையே திருடுகிறார்கள்..!

அப்போதெல்லாம்
வங்கியில் கொள்ளை அடித்தார்கள்...
இப்போது வங்கியையே கொள்ளை அடிக்கிறார்கள்!

அப்போதெல்லாம்
குழந்தைகளிடம் நகை திருடினார்கள்...
இப்போது குழந்தைகளையே திருடுகிறார்கள்..!

அப்போதெல்லாம்
படங்களும் செய்தியும் வந்ததோடு,
இடையில் விளம்பரங்களும் வந்தன..

இப்போது விளம்பரங்களுக்காக வரும் தொடர்களில்
இடையிடையே செய்தியும் படமும் சிறிதளவு வருகிறது!

அப்போதெல்லாம்
மீனவர் கடலில் மீன் பிடித்தார்கள்...
இப்போது மீனவர்களையே பிடித்துப் போகிறார்கள்..!

அப்போதெல்லாம்
அம்மா அப்பா பாசத்தால் வளர்ந்தோம்...
இப்போது மம்மியும் டாடியும் பணத்தால் வளர்க்கிறார்கள்..!

அப்போதெல்லாம்
பிள்ளைகள் வீட்டில் பெற்றோர் இருந்தார்கள்...
இப்போது வெளிநாட்டில் பிள்ளைகள்
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்கள்..!

அப்போதெல்லாம்
தண்ணியடித்தவர்கள் பயந்தொதுங்கிப் போனார்கள்...
இப்போது தண்ணியடிக்காதவரே ஒதுங்கிப் போகிறார்கள்..!

அப்போதெல்லாம்
விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தார்கள்...
இப்போது விவசாயத்தையே தள்ளுபடி செய்கிறார்கள்..!

வங்கியில் சிறு கடன் வாங்கிய விவசாயி விஷம் குடிக்கிறான்...
வங்கியை முழுங்கியவனோ வெளிநாட்டில் விஸ்கி குடிக்கிறான்..!

கடவுள் இல்லை  கடவுள் இல்லை
பெரியார் சொன்னது உண்மைதான்!

ஏழாயிரம் கோவில்களில் கடவுள் இல்லை!

பூசை வைத்த பூசாரிகள் சொல்லவில்லை...
மீசை வைத்த அதிகாரிதான் கண்டு சொன்னார்!

போலிச்சிலைகளைப் பூசித்த மக்கள் இப்போது
யோசிக்கிறார்கள்..!

கடவுள் இல்லை?

போலிச் சிலை,
போலிக் கடவுள்,
போலி மருத்துவர்,
போலிப் பூசாரி,
போலி அதிகாரி,
போலிப் போலிசு,
போலி அமைச்சர்,
போலி அரசு,
போலி மகாத்மா!

கொல்லப் பட்டவரை மகாத்மா என்றனர் பலர்...
கொன்றவனையும் மகாத்மா என்பவரும் உளர்..!

முன்பை விட
இப்போது இந்தியா  முன்னேறித்தான்விட்டது!!

கவிஞர் நா. முத்து நிலவன்