மௌனம்
என்பது நாணயம் போல இருபக்கம்
கொண்டது.
சம்மதம் என்பது ஒருபக்கம்.
சம்மதமில்லை என்பதோ மறுபக்கம்.
நடுக்கூடம்
விரித்த ஜமுக்காளம்
ஏற்றிவிட்ட குத்துவிளக்கு
பழங்களும் பூக்களும் தாம்பாளத்தட்டில்
சுற்றிலும் சுற்றமும் உற்றமும்
அப்போது வயதான பெரியவர் கேட்பார்
பெண்ணைப் பார்த்து பையனைப் பிடித்திருக்கிறதாவென?
பதிலுக்கு அவளோ
மௌனத்தை விடையாகத் தருவாள்!
அதற்கென்ன பொருள்?
அவள் நாணயத்தின் எப்பக்கத்தை விடையாகத் தந்தாளென புரியாத அனைவரும் மௌனம் சம்மதம் என எடுத்துக்கொண்டால்
என்னாவது?
சம்மதமில்லை எனத்தெரிவிக்கக் கூட சம்மதமில்லாமல் மௌனமாய் இருப்பவர்கள் நிறையபேர்!
இனி
மௌனத்தின்
அடிவேர்வரைச் சென்று ஆராய்ந்து
பின்னரே
முடிவுசெய்வோம்
சம்மதமா?
சம்மதமில்லையா?
என்று!
த.ஹேமாவதி
கோளூர்