காற்றுவாங்கும் எண்ணமுடன் ஆற்றோரம் நடப்பவரே
சற்றுநேரம் நான் சொல்லும் என் கதையைக் கேளீரோ?
ஆற்றோரம் அமைதியாக அம்போ என இருந்தவன் நான்.
மாற்றானாய் எவரையுமே நினைக்காமல் இருந்தவன் நான்.
பலர் என்மேல் அமர்ந்தார்கள் பல கதைகள் சொன்னார்கள்.
சிலர் வந்து பார்த்தார்கள் சில கருத்து சொன்னார்கள்.
பலகருத்தைப் பலர்வந்து பலவிதமாய்ச் சொன்னாலும்
என்கருத்தைக் கேட்கும் எண்ணம் எவருக்கும் தோன்றவில்லை.
நான் என்ன ஆகவேண்டும் நானன்றோ சொல்ல வேண்டும்
அதைச் சொல்லும் ஓர் உரிமை அது தானே எனக்கு வேண்டும்.
இத்தனை நாள் எட்டி என்னை மிதித்தவர்கள் மதிக்கவேண்டும்
காலால் என்னை அளந்தவர்கள் கையெடுத்து வணங்கவேண்டும்.
அந்த நிலை எனக்கு வேண்டும் அதற்கெனக்கோர் சிற்பி வேண்டும்.
கண்ட கனவு பலிக்கவேண்டும் அதைக் கண்டு நானும் மகிழ வேண்டும்.
அதற்கெனக்கோர் சிற்பி வேண்டும்
அறிந்தவர்கள் சொல்லவேண்டும்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*