Header Ads Widget

Responsive Advertisement

வாழ்வியல் புத்தகம்



வாழ்க்கையென்ற புத்தகத்தின் முதல் பக்கம் புரட்டுகின்றேன்
வந்து நின்ற பெற்றோரின் தியாகத்தைப் படிக்கின்றேன்
பாசமென்றால் என்னதென்று மனப்பாடம் செய்கின்றேன்.

அடுத்தபக்கம் சென்று பார்த்தால் உடன்பிறந்தோர் இருக்கின்றார்
உடனிருந்து காத்துநின்று உயரவழி செய்கின்றார்
உரிமையென்றால் என்னதென்று உவப்புடனே படிக்கின்றேன்.

அதன் அடுத்து புரட்டி நின்றால் ஆசிரியர் வந்து நின்றார்
கல்வியுடன் ஒழுக்கத்தைக் கனிவுடனே சொல்லிநின்றார்
கடமையென்றால் என்னதென்று கட்டுரையாய்க் காண்கின்றேன்.

இனி என்ன என்கின்ற ஆவலுடன் புரட்டுகின்றேன்
வண்ணமயமான ஒரு பக்கத்தைப் பார்க்கின்றேன்
நலம் நாடும் நட்பதனின் நல்மனதைக் காண்கின்றேன்.

அன்பு என்றும் பரிவு என்றும் கடமை என்றும் படித்த பின்னே
ஆவலுடன் ஆசையுடன் அடுத்தபக்கம் செல்கின்றேன்
சூழ்ச்சியென்ற சூது என்ற அரசியலால் அலுக்கின்றேன்.

களைப்புடனே அடுத்த பக்கம் புரட்டி எட்டிப் பார்க்கின்றேன்
மனைவியோடு குழந்தைகள் மகிழ்வித்து நின்றார்கள்
குடும்பம் என்ற பொறுப்பதனை கைகளிலே தாங்கி நின்றேன்.

சமுதாயம் என்கின்ற பாடத்துள் நுழைகின்றேன்
சதிகாரர் பலபேரை ஓரத்தில் காண்கின்றேன்
சறுக்காமல் இருக்கவேண்டும் மனதுக்குள் நினைக்கின்றேன்.

குடிமக்கள் என்கின்ற பாடத்தை எடுக்கின்றேன்
கோடியிலே கோடியுடன் சிலபேரைக் காண்கின்றேன்
மீதிபேரின் இரத்தத்தை வியர்வையாய்க்கண்டு அழுகின்றேன்

தோல்வியென்ற பாடத்தை விழுந்து விழுந்து படிக்கின்றேன்
பலமுறை படித்தபின் எழுந்து நிமிர்ந்து நிற்கின்றேன்
விழுந்தபின் எழுதல் தான் வெற்றி என்று கற்கின்றேன்.

கற்றதெல்லாம் கையளவே உணரத்தான் செய்கின்றேன்
மற்றதெல்லாம் மலையளவு மலைத்துத்தான் நிற்கின்றேன்,
பெற்றதெல்லாம் வீண்தானா? கேள்வியும் கேட்கின்றேன்.

மனிதம் என்ற பாடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்
இருப்பதாக நண்பர்கள் சொன்னதை நினைக்கின்றேன்
இருக்கும் என்று நம்பியே தேடலைத் தொடர்கின்றேன்.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*