மாலை நேர வேளையிலே மனம் கவர்ந்த காட்சியாக
மேலைக்கடல் ஓரமாய் மெய்சிலிர்க்க வைக்கிறது
எண்ணத்தைச் சிதறடிக்கும் வண்ணவண்ணக் கலவையில் கண்ணைக் கவர்ந்து நின்ற ஆதவனின் ஒளிச்சிதறல்.
நீலத்திரைக்கடல் ஓரத்திலோர் ஓவியமாய்
வானத்து தாரகையை வரவிடாதோர் ஓவியமாய்
நிலமகளின் பசுமைதனை மின்னவைத்தோர் ஓவியமாய்
கதிரவனின் கிரணங்களின் கலக்கலான ஓவியங்கள்.
காதலர்கள் மனங்கவர்ந்த மாலை நேர வேளைதனில்
கவிஞர்களின் கற்பனையைக் கவர்ந்திழுத்த ஓவியமாய்
கண்குளிர மனம்குளிர கருத்தைக் கவர்ந்திழுத்த
ஓவியனாம் சூரியனின் தூரிகைத் தூறல்கள்.
மனம் குளிரவைத்தது இரவிவர்மன் தூரிகை
வியந்து பார்க்கவைத்தது டாவின்சியின் தூரிகை
மலைத்து நிற்கவைத்தது மாருதியின் தூரிகை
ஜெயகோஷம் போடவைத்த ஜெயராஜின் தூரிகை
மனம் திறக்க வைத்தது ம.செ. வின் தூரிகை
லயிக்கச் செய்தது லதாவின் தூரிகை
அசரவைத்தது அரஸ்ஸின் தூரிகை
கண்முன்னே கலையழகாய்
இன்னமும் இன்னமும் தூரிகைத் தூறல்கள் தூண்டுதல்களாக.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*