காற்றென்றத் தூரிகையின் சில்லென்ற தூறலாய் இளந்தென்றல் வீசும்!அதனாலே
தேகங்கள் குளிர அகங்களும் மகிழும்!
இளஞாயிறும் தூரிகையாய் மாறி
தன்கிரணங்களால்
மழலைவெப்பத்தைத்
தூறலாய்ச் சிந்தும்!
அவ்வெள்ளொளி வெளிச்சத்தால் இவ்வையகமே ஏழ்வண்ணம் பெற்று வானவில் சித்திரமாய்த் திகழும்!
ஆழ்கடலும் சும்மாயிராமல்
இரைச்சலோடு
தன்அலையென்ற தூரிகைகளால்
மனஞ்சலியாது
நித்தமும் கரைமோதி காண்பவர்கருத்தை கொள்ளைகொள்ளும் வண்ணம்
அழகான கடற்கரை என்ற சித்திரத்தை எழுதிக் கொண்டேயிருக்கும்!
கருமுகில்கள் யாவும் வானமென்றக் கலைக்கூடத்தில்
கூடும்போதெல்லாம்
தத்தம் தூரிகைகளைச் சிந்திசிந்தித் தூறலாய் மழைச்சிந்தும்!
தேனில் நனைந்தசுகம் தருகின்ற அம்மழையின்பம்
அவரவர் எண்ணத்திற்கேற்ப
எழிலான வண்ணம் கொள்ளும்!
வேர்களென்ற தூரிகைகள் மண்ணென்ற தாளுக்குள் உட்புகுந்துப் போராடி புவியீர்ப்பு விசைக்கு ஏதிராக
மண்ணுக்கு வெளியே வரையும் முப்பரிமாண வண்ண ஓவியங்களே தாவரங்கள்!
பச்சைவண்ண இலைகள் தாலாட்ட பலவண்ண மவர்கள் கொஞ்சல்மொழி பேச
வண்ணக்கலவையைச் சரியான விகிதத்தில் கையாளும் வித்தையை இவ்வேர்கள் எங்குஎவரிடம் எப்படி கற்றனவோ?
காதலிலே கட்டுண்ட
இருவரின் இதயங்கள் தூரிகையாய் மாறி
கணநேரமும் எண்ணமென்ற வண்ணங்களைத் தூறலாக்கி அத்தூறலிலே நாளெல்லாம் நனைந்து மகிழும்!,
தாய்மையென்ற தூரிகை தந்த ஓவியமாம் மழலை என்ற வண்ண ஓவியமே
குடும்பத்தை அழகான வண்ணங்களால்
எழிலூட்டும் தூரிகையாய் மாறுவது விந்தை!
இதனாலே நான் சொல்லுவது யாதெனில் தாய்மையென்ற தூரிகைதான் தூரிகையுள் மிகச்சிறந்த தூரிகை!
த.ஹேமாவதி
கோளூர்