Header Ads Widget

Responsive Advertisement

சொல்



நேரிலே சொல்லும் சொல் ஒரு பொருள் உணர்த்த,
அலைபேசியில் பேசும் சொல் மறுபொருள் உணர்த்த,
எழுத்திலே வடித்த சொல் இரு பொருள் உணர்த்த,
சொல்லுக்குப் பொருளா?
சொல்லும் தளத்துக்குப் பொருளா?
சிந்திக்க வைக்கிறது நாம் சொல்லும் ஒரு சொல்.

உம்மென்று சொன்ன சொல் ஒரு எண்ணம் கொடுக்க,
சிரிப்புடன் சொன்ன சொல் மறு எண்ணம் கொடுக்க,
அழுத்தமாய் சொன்ன சொல் இரு எண்ணம் கொடுக்க,
சொல்லுக்குப் பொருளா?
சொல்லும் விதத்துக்குப் பொருளா?
ஆய்வு செய்யவைக்கிறது நாம் சொல்லும் ஒரு சொல்.

மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கையில் ஒரு புரிதல்,
கோபத்தின் உச்சியிலே தகிக்கையில் ஒரு புரிதல்
சாந்தமாய் நினைக்கையில் அளிக்கிறது மறுபுரிதல்
சொல்லுக்குப் பொருளா?
புரிவோர் மனநிலைக்குப் பொருளா?
வருத்தத்தை அளிக்கிறது பல நேரம் ஒரு சொல்.

ஒன்றுமட்டும் சொல்வேன் அதும் உறுதியாகச் சொல்வேன்
கல்லிலே கலைவண்ணம் கண்டார் சிலபேர்,
சொல்லிலே பல எண்ணம் கொண்டார் பலபேர்.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*