Header Ads Widget

Responsive Advertisement

என்ன சொல்கிறது பெண்மை?

*என்ன சொல்கிறது பெண்மை?*

இறைவன்
ஒருநாள் பூமிக்கு
தூதுவன் ஒருவனை அனுப்பி
ஒவ்வொருவரும்
என்னிடம் சொல்ல
விழைவதென்ன
என்றே கேட்டறிந்துவா!
என்றான்.
சென்ற தூதுவனும்
அவ்வாறே சென்று
கேட்டறிந்து வந்தான்.
ஆவலாய் இறைவன் கேட்டான் அவனிடம்.
பூமியிலே வாழும்
*ஆண்மை என்ன*
*சொல்கிறது?* என்று.
பெண்மையைப் படைத்த இறைவனுக்குக்
கோடானுகோடி நன்றிகள்!
பெண்மையால் நாங்கள் இனிதுடன் வாழ்கிறோம்!
பெண்மையால் நாங்கள் மணக்கிறோம்!
பெண்மையைப் படைத்ததனால் அவன் பெருஞ்சிறப்பெய்தினான் என்று இறைவனிடம் கூறு!
என்ற ஆண்மையின் பதிலை தூதுவன் இயம்பினான்.
அடுத்து
*மழலை என்ன சொல்கிறதென்றான்!*
அதற்கு தூதுவன் சொன்ன பதில்
பெண்மையின் தாய்மையால் நாங்கள் பிறந்தோம்!
பெண்மையின்
தாய்ப்பாலால்
நாங்கள் வளர்ந்தோம்!
பெண்மையின்
கண்ணிமைகளுக்குள்
நாங்கள் வளர்ந்தோம்!
பெண்மையின் தாய்மைக்குள்ளே
அனைத்தையும் பெறுகிறோம்!
இதனால் இறைவனிடம் நாங்கள் கேட்கவிரும்புவது யாதொன்றுமில்லை!
பெண்மையின் தாய்மையே எங்களுக்கு இறைவனாகும்!
இவ்வளவும் கேட்ட இறைவன் திகைத்தான்!
தன்னிலும் பெண்மையின் தாய்மை விஞ்சுகிறதே!
படைத்தவன் நாமோ அதனை மிஞ்சியே இருக்கிறோமே என்று!
அடுத்ததாய் ஆவல்பொங்கிடக் கேட்டான் தூதுவனிடம்!
*பெண்மை என்ன சொல்கிறது?* என்று.
ஒருகணம் சிரித்த தூதுவன் சொன்னான் பெண்மையைப் பேசவைத்ததே பெரும்பாடாகி விட்டதெனக்கு!
பெருமுயற்சி நான்செய்தேன்!
பெண்மையிடம் இறைவனுக்குத் தாங்கள் சொல்லும் செய்தியென்ன என்றேன்!
அதற்கு பெண்மை
சொன்ன பதில் இதோ!
"எனக்கென விருப்பம் ஏதுமில்லை!
குடும்பத்தை மீறிய ஆலயமும் எனக்கேதுமில்லை!
எத்தனை இடர்கள் வரினும் கணவனைவிட்டுப் பிரிவதில்லை!
மறுபிறவி என்றாலும் பிள்ளைப்பேற்றைத் தடுப்பதில்லை!
எங்கள்வயிறு காய்ந்தாலும் தலைவன் மற்றும் குழந்தைகள் வயிற்றைக் காயவிடுவதில்லை!
இல்லறக் கோயிலில் எரியும் தீபமாய் ஒளிதரும் எங்களுக்கு மழலைச்செல்வத்தைவிட
வேறென்ன வேண்டிநிற்போம் உம்மிடத்தே!
யாவும் கேட்ட இறைவன் சிந்தித்தான்!
பெண்மை எனக்கடுத்தல்ல
என்னையே முந்திநிற்கிறது
அன்பால்
கருணையால்
வள்ளன்மையால்
ஆகவே
பெண்மைக்கு இன்னும் இன்னும் சிறப்புகள் பல சேர்ப்போம்!
பெண்மை வாழ்கென்று கூத்திட்ட பாரதியை மீண்டும் பூமிக்கு அனுப்புவோம்!
என்று முடிவெடுத்தான்.

த.ஹேமாவதி
கோளூர்