அலைகடலின் ஆர்ப்பரிப்பை அருகில் சென்று இரசித்ததும்,
அலைக்குள்ளே மீன்போலே அயராது சென்றதும்,
அலையுடனே மணல் போலே கரைநோக்கி வந்ததும், நினைவலையில் வந்து நின்று நிஜமுணர்த்தி நின்றது
அது அறியாத வயது.
ஆற்றங்கரைப் பாலத்திலே மேலேறிச் சென்றதும்,
ஆற்றுநீரில் ஆழம் பார்த்து கரணம் அடித்து நின்றதும்
ஆற்றுநீரின் ஒழுக்கோடு அடித்துச்செல்லப் பட்டதும்
நினைக்கையிலே நெஞ்சினிலே பயமுணர்த்திச் சொன்னது
அது அறியாத வயது.
தென்னைமர உச்சியிலே இழைந்தேறிச் சென்றதும்,
இளநீரைப் பறித்துவந்து அவளுக்குத் தந்ததும்,
தோப்புடமை உறவினரால் கண்டிக்கப் பட்டதும், உணர்ந்துவிட்ட தவறாக இருந்தாலும் சொன்னது
அது அறியாத வயது.
தெரிந்து செய்த சில தவறும்
தெரியாத பல தவறும்
புரிந்து கொண்ட மனிதர்களால்
புதிய நாமம் கொண்டது
அது அறியாத வயது.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*