Header Ads Widget

Responsive Advertisement

என் உலகம்


எல்லோருக்குமான உலகத்தில் நான்

இருந்தாலும்

அடிக்கடி வாய்ப்புகள் கிட்டும் போதெல்லாம்

எனக்கான உலகத்தில் நான் சென்றிடுவேன்!

பேரானந்தத்தில் மூழ்கிடுவேன்!

அந்தந்த நேரங்களில் எனக்கான உலகங்கள் மாறிப்போகும்!

பிள்ளைப் பிராயத்திலே பொம்மைகளே என்னுலகம்!

என்விரல்களுக்கு 

பருவம்வந்த நாள்முதலா கரித்துண்டும்

சுண்ணக்கட்டிகளும்

வீட்டின் கட்டாந்தரையுமே என்னுலகமானது!

பாரம்பரியக் கடத்தலால் என்அப்பாவின் ஓவியக்கலை என்னோடு ஒட்டிக்கொண்டதன் விளைவே தரையும் கிறுக்கல்களும் என்னுலகமானது!

அப்படியே வளர்ந்து

பள்ளியிலே சேர்க்கப் பட்டேன்.

சேர்க்கப் பட்டநாள்முதலா

பள்ளிக்கூடம் என்உலகானது!

உறக்கத்திலும் கனவாய் நான்

பள்ளியென்ற உலகில் சென்றிடுவேன்!

நான்கு படிக்கையிலே பாட்டொன்று எழுதி

பாராட்டைப் பெற்றநாள்முதலா

கவிதை என்உலகானது!

செந்தமிழ் இலக்கியமன்றத்தின்

செயலாளர் பொறுப்பை என்தமிழாசிரியை அம்மா வழங்கிய நாள்முதலா

தமிழே என்தனி உலகானது!இன்றுவரை தொடர்கிறது!

அடுத்ததாய் கல்லூரி என்னுலகானது!

கல்லூரித்தோழிகளும்

பேராசிரியர்களும்

என்னுலகமாயினர்!

எனது சகோதரியின் குழந்தைகளும்

என்அண்ணனின் குழந்தைகளும்

திருமணத்திற்குப்பின்

என்கணவரும்

என்குழந்தைகளும்

என்னுலகமாய்

ஆனந்தமுற்றேன்!

ஆசிரியராகிய நாள்முதலா

கோளூர் அரசுஉயர்நிலைப் பள்ளியும்

எனது மாணவர்களும் என்னுலகமாய்

என்வாழ்வைப் பொன்னாக்கிய இன்பத்தை நான் என்னென்பேன்!

சிறுமியாய் இருக்கையிலே

என்தாத்தாவும்

அவருக்கு நான் படித்துக்காட்டிய

தேசிங்கு ராசாவும்

ஏணியேற்றமும்

நல்லதங்காளும்

என்னுலகமாயிருந்த கதைசொல்லமறந்தேனே!

ஓய்வானவேளையிலே

இளம்பருவ நாட்களுக்குள்

சிந்தனையைச் செலுத்திடுவேன்!

கடந்தகாலத்தை என்னுலகமாக்கிக் கொள்வேன்!

இவற்றைத் தவிர

மௌன உலகத்தில்

இனிமையை நான்காண்பதும்

செடிகொடி தாவரங்களுடன் நான்பேசி மகிழ்வதும் கடலலைகளோடு துள்ளிவிளையாடியதும்

என்தந்தையோடு கை கோத்து ஆடிமகிழ்ந்ததும்

என எத்தனைஎத்தனை

தனிஉலகங்கள் 

அத்தனையும் சொல்லிவிட்டேனா இல்லையா என்றுநான் நினைக்கையிலே

சிவனோடு ஒன்றிய நினைவோடு நானிருந்த உலகத்தைச் சொல்லாமல் விட்டேனே!

சொல்லிவிட்டேன்!

இப்போதெல்லாம்

*அகத்தியரே* என்னுலகமாயிருக்கிறார்!

அல்லும் பகலும் அவர்நினைவே!

என்றும் எப்போதும்

அவர்துதியே!

மௌனமும் அகத்தியரும் என்முழுநேர உலகமாய் !

ஆனந்த அமைதியில் நான்!


*த.ஹேமாவதி*

*கோளூர்*