தெருக்கள் நான்காய் பிரியும் இடம்
முண்டாசுக் கவிஞன் தலைகவிழ்ந்த கோலத்தில்
கையிலா ஒருவனின் சித்திரம் இது;
பல நாளாய் இத்தெருவைக் கடந்து போகிறேன்
ஒருநாளும் இப்படியொரு
அகோர சித்திரத்தைப் பார்த்ததே யில்லை;
எல்லாநாளும் படம் வரையப்பட்டிருக்கும்...
விடுமுறையே கிடையாது
வருமானத்திற்கு மட்டுமல்ல
கலைப்பசியைத் தீர்ப்பதற்கும் தான்;
ஒருநாள் இசுலாமிய கடவுளெனில்
மறுநாள் கிறிஸ்தவம்
இன்னொரு நாள் இந்துவென்று
நாட்களுக்கு ஒன்றாய்
மதங்களை சித்திரங்களாய்
நிரப்பி அகமகிழ்வான்;
பறவைகளாய் ஒருவாரம்
விலங்குகளாய் சிலவாரம்
என உயிரோட்டமாய்
சித்திரங்கள் காண்போரை
சிலிர்க்க வைப்பது வழக்கம்;
ருஷ்ய இலக்கியவாதி தொடங்கி
தமிழக விடுதலைப் போராட்ட வீரர்கள் வரை
சித்திரத்தால் புலகாங்கிதம்
அடைய வைப்பவன்....
நாள்தோறும்
சித்திரத்தால் கச்சேரி நடத்துபவன்...
தெருநாய்கள் கூட சித்திரக்காரனுக்குச் சிப்பாய்கள் தான்....
அழுகின்ற குழந்தைகளுக்கு சித்திரம்
ஒரு தின்பண்டம் தான்...
மழைக்காலங்களில்
தெருவில் உள்ள வீட்டுக்காரர்கள் அடைக்கலம் கொடுக்கத் தவறுவதில்லை...
பசி
சித்திரக்காரனுக்கு
ஒருபோதும்
தொல்லை செய்ததில்லை
அந்த வேலையை
தெருவில் உள்ளோரே
பார்த்துக் கொண்டனர்....
ஆனால்...
இன்று பார்த்த சித்திரம்
என்னைச் சிதைத்தே விட்டது..
காலா என்னருகில் வாடா
என்றவனின் முகம்
கவிழ்ந்தும்
மீசைகள் மழிக்கப்பட்டும்
சோகத்தின் சுவடுகள் போல...
அவனது ஆடைகள் அழுக்கேறப் பட்டது போலவும்...
அங்குமிங்கும்
இரத்த வடுக்களாய்...
இந்தச் சித்திரத்தைப் பார்த்த பின்னும்
என்னால் கடந்து வரவே...
முடியவில்லை;
ஒருவேளை
என் பாரதி
சுதந்திர இந்தியாவில்
இன்றிருந்திருந்தால்...
இப்படித்தான் இருந்திருப்பாரோ....
இல்லை
சித்திரக்காரனின் சித்து
விளையாட்டா....
ஒன்றும் புலப்படாதவனாய்
புலம்பிக்கொண்டிருக்கிறேன்.....
*கரிசல் தங்கம்*