*
விரித்து வைத்த நீலப்பட்டுச்சேலை
போல வானம்!
அதன்மீதிலே
சிந்திய வெண்தயிராய்
மேகங்கள்!
தகதகக்கும் கதிரவனுக்கு இறைவன் கட்டிவிட்ட தூளிஇது!
கதிரவனே படுத்தாலும் எரியாத சேலைஇது!
பகலெல்லாம் கதிரவனைத் தாங்குவதால் இரவிலே குளுமையூட்ட
தங்கப்பந்தாம் நிலவு அச்சேலையெங்கும்
உருண்டோடும்!
உருண்டோடும்
அப்பந்தை எவரும்
கவர்வாரோ?என்றஞ்சி தூரத்தே
வெள்ளைப்பூனைப்படை வீரர்களாய்
தாரகைக் கூட்டங்கள் விழிப்பாய் காவல்காக்கும்!
எப்போதெல்லாம்
மழை பொழியுமோ
அப்போதெல்லாம்
துவைக்கப்படும்
இந்த நீலப்பட்டுச்சேலைக்கு
ஆதியேது?அந்தமேது?அன்றும் இருந்தது!இன்றும் இருக்கிறது!நாளையும் இருக்கும்!நம்மைவிட்டுப் பிரிந்தவர்களை
நினைவு படுத்திக்கொண்டே
இருக்கும்!
ஔவையாருக்கு
அதியனின் மகள்கள்
அங்கவை சங்கவை
இருவரும் அளித்த
நீலச்சேலை உன்னை விடவும் உயர்ந்தது!
நீ பரந்திருக்கிறாய்!
ஔவைக்கு சேலைதந்த இருமகள்களின்
மனங்களோ உன்னைவிடவும்
மிகப் பரந்தது
என்பதை அறிவாயா நீ?
*த.ஹேமாவதி*
*கோளூர்*