கடித்தே தீருவேன் என்ற வெறியோடு என்னைச் சுற்றியே வந்தது
கொசு ஒன்று காலையில்.
அடித்தே தீருவேன் என்ற பிடிவாதத்தோடு நான் இறங்கினேன் அதனையே துரத்திடும் முயற்சியில்.
கையிலே அமர்ந்தது, கடிக்கவும் முயன்றது, அடித்தபின் பார்க்கையில்
உயிரிழந்திருந்தது,
இரத்தமே இல்லாமல்
காய்ந்து போய் இருந்தது.
பசிக்காக வந்ததா?
ருசிக்காக வந்ததா?
எதற்காக வந்தாலும் அதன்கதை முடிந்தது,
ஒருதுளி இரத்தம் கூட கிடைக்காமல் மடிந்தது.
இரக்கமே இல்லாமல் கொன்றாயே என்பீர்கள்!
ஒரு துளி இரத்தம் கொடுக்கலாம் என்றால்
வலிதாங்க வேண்டுமே,
நோய் தாங்க வேண்டுமே.
இரத்தம் குடிக்க நினைப்பது கொசுவின் தவறா?
அதை அழிக்க நினைப்பது மனிதனின் தவறா?
வாழ நினைப்பது கொசுவின் தவறா?
தனைக் காக்க நினைப்பது மனிதனின் தவறா?
அவரவர் இயல்பினில் அவரவர் இருக்கிறார்,
அவரவர் கடமையை
அவரவர் செய்கிறார்,
குறைகாண விழைபவர் குறைசொல்லி மகிழ்கிறார்.
*சுலீ அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*