சிவகாசியில்
நாங்கள் மொத்தமாய்ப் பிறந்தோம்!
வண்ணவண்ண தாளால் சுற்றப்பட்டு
பாதுகாப்பாய்
அட்டைப்பெட்டிக்குள்
வைக்கப்பட்டோம்!
அப்போதே தெரியும்
இந்த அட்டைப்பெட்டிதான் எங்களின் சவப்பெட்டி என்று!
நாங்கள் விலையாக்கப் பட்டு
எங்கெங்கு எடுத்துச்செல்லப் படுகிறோமோ
அந்தந்த ஊர்கள்
எங்களுக்கு குருக்ஷேத்ரமாகி விடுகிறது! ஏனெனில் கௌரவர்கள் பாண்டவர்களால் கொல்லப்பட்டது போல உங்களால் நாங்கள் மொத்தமாய் எரிக்கப்பட்டு கரியாகிவிடுகிறோம் ஆனாலும் ஒரு சந்தோஷம்!
நாங்கள் உங்களால்
தீக்குளிக்கப்பட்டாலும்
அப்போது எங்களால் உருவாகும் வர்ணஜாலங்களும்
சப்தராகங்களும்
உங்களின்
விழிகளுக்கும்
செவிகளுக்கும்
மகிழ்ச்சியைத் தருகிறதே என்று
பெருமிதப் படுகிறோம்!
விடியலிலே துயிலெழுந்து எண்ணெய்க்குளியலை
முடித்து
புத்தாடை உடுத்தி
பரவசமாய் எங்களைத் தீமூட்ட
தெருவாசல் வருகின்ற பேர்களுள்தான்
எத்தனை எத்தனை வகையினர்!
தைரியமாய் பக்கத்தே வந்தும்
பயத்தோடு எட்டநின்றும்
நடுநடுங்கும் கரத்தோடும்
எங்கள் உச்சந்தலையிலே
கொள்ளிவைக்க
நீங்கள் முயல்வதைப் பார்த்து மகிழ்ந்தாலும் உள்ளுக்குள் மிரளுவோம்!
தீபாவளியில் அழிந்தது நரகாசுரன் மட்டுமல்ல!நாங்களும்தான்!
த.ஹேமாவதி
கோளூர்