புதுமணமக்களுக்கெல்லாம்
இது தலைதீபாவளி!
தீபாவளி வரிசை
வைத்து
புதுமணமக்களை
அழைத்துச் செல்ல
வருகின்ற பெண்வீட்டார் சுற்றம்!
அப்போதே களைகட்டத் தொடங்கிவிடும் தலைதீபாவளி!
சிலருக்கு மணமான உடனேயும்
சிலருக்கு நெடுநாள்
பொறுத்தும் வந்திடும் இத்தீபாவளி!
தேனிலவுக் காலத்திலேயேயும்
சிலருக்கு தலைதீபாவளி வருவதுண்டு!கொடுத்துவைத்தவர்கள் அவர்கள்!
நெருங்கியும் நெருங்காமலும்
பழகியும் பழகாமலும் புரிந்தும் புரியாமலும் இல்லறத்தின் ஆரம்பத்திலுள்ளவர்களுக்கு
தேனிலே கனிச்சாறு கலந்தாற்போல் தலைதீபாவளி!
மத்தாப்பில் அவள்விழிகள் லயிக்க அவன்விழியோ அவளின் விழிமத்தாப்பை ரசித்திருக்கும்!
வெடிச்சத்தம் கேட்டு
கைத்திரையால் முகமலரைப் பொத்தியபடி நடுங்கும் ஆரணங்கை ஆதரவாய் அணைக்கையிலே வாகைசூடி திரும்பிய மூவேந்தனாய் அவனை நினைக்கவைக்கும்!
போதாதற்கு மச்சினிகள் இருந்தாலோ அவன்பாடு கொண்டாட்டம்!அவர்கள் மத்தியிலே பெரிய வீரனெனக் காட்டிக்கொள்ள தீபாவளி கைகொடுக்கும்!
புத்தம்புது பட்டில்
வலம்வரும் அவள்
பக்கத்தே இருந்திட
இனிப்புகளை உண்ண ஆர்வம் குறைந்தே இருக்கும் அவனுக்கு!இது தெரியாமல் மாப்பிள்ளைக்குக் கோபமோ என மாமியார் தவிப்பதும் காரணம் புரிந்து பெண் சிரிப்பதும் அவள்சிரிப்பதை இவன் ரசிப்பதும்
அப்பப்பா ........
அதற்குள் முடிந்துவிடும் தலைதீபாவளி!
ஆனாலும் உயிர்நீங்கும்வரை
அது தந்த இன்பங்கள் நீங்காமல் நெஞ்சில் நிலைத்திருக்கும்!
த.ஹேமாவதி
கோளூர்