இளமைக்கு கருத்த முடியழகு!
முதுமைக்கோ நரைத்த முடிதான் அழகு!
வெள்ளைவெளேர் என்றிருக்கும் என்பாட்டியின் நரைமுடியை மனக்கண்முன் நிறுத்துகிறேன்!
வெள்ளியாய் மின்னும் அவள்நரைமுடியின் இழைஒவ்வொன்றுக்கும்
தனித்தனி வரலாறு உண்டு!
இளமையில் தாயை இழந்த தவிப்பு ஓரிழை!
பள்ளி சென்று கற்கவில்லையே என்ற தவிப்பு ஓரிழை!
கிராமத்தை விட்டு சென்னை மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் பட்டு
சென்னையில் வாழவந்ததற்கு அப்போது மனதில் பட்ட பயத்திற்கு ஓரிழை!
குழந்தைகள் ஏழு பிறந்து அடுத்தடுத்து மூன்றாவது ஏழாவது தவிர அனைவரும் மடிந்ததை எண்ணி
அழுததற்கு ஓரிழை!
இப்படி அடுத்தடுத்த நிகழ்வுகளுக்காக
தன்னுடலையும் தன்மனதையும்
தயார்படுத்தி பக்குவமானதால்
கொஞ்சம்கொஞ்சமாய் நரைத்த கூந்தலும்
கார்த்திகை தோறும் விரதமிருந்து முருகனை நினைந்து
வணங்கி அவனருளால் எல்லாம் நன்மையே என எண்ணிட எண்ணிட மனம்கொண்ட பக்குவம் ஓர்இழை!
மொத்தத்தில் எல்லா இழைகளும்
வெண்பட்டு வடிவம்கொண்டு
பார்ப்போர் கண்ணையும் மனதையும் கவர்ந்தது நிச்சயம்!
இதோ இன்றும்கூட
அந்த வெள்ளைமுடிகளுள்
ஒன்று எனக்குள் பேசிக்கொண்டே இருக்கிறது!
தன்பட்டறிவை உணர்த்திக் கொண்டே இருக்கிறது!
த.ஹேமாவதி
கோளூர்