பற்குச்சியைப் பிடித்து பல்துலக்கச் சொல்லித்தந்த விரல்கள்!
ஆங்கிலத்தைச் சங்கிலியாய்ச் சேர்த்தெழுத எங்கள் விரல்களைப் பிடித்து பழக்கிய விரல்கள்!
அளவோடு அக்கறையாய் எங்கள் நகங்களை வெட்டி நகச்சாயம் பூசிவிட்ட விரல்கள்!
எங்கள் தேர்ச்சி அட்டைகளில் வெள்ளைக்காரன்போல
ஆங்கிலத்தில் கையெழுத்துப்போட எழுதுகோலை லாவகமாய்ப் பிடித்த கம்பீரமான விரல்கள்!
எங்களுக்கு காய்ச்சல் வந்தால்
நெற்றியிலே பதம்பார்க்கப் பாசத்துடன் தடவும் விரல்கள்!
கடற்கரைக்குக் கூட்டிச்செல்கையில்
நாங்கள் பிரிந்துவிடாமலிருக்க
எங்களின் பிஞ்சுவிரல்களை மென்மையாய்ப் பத்திரமாய்ப் பிடித்துக்கொண்ட
ரோசாப்பூ போன்ற
பருத்த சிவந்த நீளவிரல்கள்!
இவ்வளவும் சொன்னேனே அந்தவிரல்களெல்லாம்
எங்கள் அப்பாவின்
அழகான பாசமான விரல்கள்!
இனியென்று அந்தவிரல்கள் எங்களைப் பிடித்துக்கொள்ளும்?
அப்பாவின் விரல்தீண்டா பிள்ளைகளாய் ஆகிவிட்டோம் இன்று!
த.ஹேமாவதி
கோளூர்