Header Ads Widget

Responsive Advertisement

நாஞ்சில் ப சுந்தரேசன் - எங்கள் அப்பா. நினைவு நாள் கவிதை


( 18-11-2018 எங்கள் அப்பாவின் இருபதாம் ஆண்டு நினைவுநாள்.)

இருபது ஆண்டுகள் கடந்து போய் விட்டது,
எண்ணினால் கண்ணீரோ எட்டிப்பார்க்கின்றது,
தலைநகராம் டெல்லியிலே அன்று வந்த செய்தி,
அப்பா இனி இல்லை என்று சொல்லி நின்ற செய்தி.
மறக்கமுடியவில்லை
மறக்கமுடியவில்லை அந்தச் செய்தியின் தாக்கத்தை.

இரண்டாவது படிக்கையிலே, இனிமையான தமிழினிலே, என்னைப் பேசவைத்து அழகுபார்த்த என் அப்பா.
மூன்றாவது படிக்கையிலே வசனம் பேசி நடிக்கவைத்துப் பரிசுகளை வாங்கவைத்த என்னுடைய அப்பா.
முத்தமிழும் எனக்களித்து எனையிங்கு வளரவிட்டு
இறைவனடி சென்றுவிட்ட என்னுடைய அப்பா.
மறக்கவில்லை அப்பா நீங்கள் அளித்த தமிழை.

வருத்திக் கொண்டீர்கள் உங்களை நீங்களே,
வளர்த்து விட்டீர்கள் எங்களை நீங்களே,
வளர்ந்துவிட்ட எங்களைப் பார்த்து மகிழ நீங்களில்லை,
நீங்கள் தந்த உயர்வன்றி எங்களுக்கு வேறு இல்லை.

ஐந்து பிள்ளைகளுக்கு நீங்கள் அப்பா என்றாலும்
ஊரிலுள்ள மற்றவர்க்கோ
நீங்கள் என்றும் அம்மாவன்(தாய்மாமன்).
சாதி, மத, இனம் கடந்து அனைவருக்கும் அம்மாவன்.
இன்றும் கூட நாங்களெல்லாம்
அம்மாவனின் பிள்ளைகள்,
அதைவிடப் பெரிதாக வேறென்ன வேண்டும் அடையாளம்.
நிலைபெற்று நிற்குதப்பா உங்கள் பிள்ளைகள் என்ற அடையாளம்.

இரண்டு வார இடைவெளியில் நள்ளிரவில் வருவீர்கள்,
விதவிதமாய்த் தின்பண்டம் வாங்கிவந்து தருவீர்கள்,
தூங்குமெங்களை எழுப்பிவிட்டு தின்னவைத்து மகிழ்வீர்கள்,
மறக்க முடியவில்லையப்பா நீங்கள் காட்டிய பாசத்தை.

கடைசி நாளில் அல்லாமல் கட்டணத்தைக் கட்டியதில்லை,
அதைக்கொடுக்க பலநேரம் சுமைதூக்கச் சென்றீர்கள்,
முத்தமிழின் சங்கமம் மூட்டை தூக்கி நின்றதனைக்
கண்டவர்கள் சொன்னபோதோ கண்கலங்கி நின்றதுண்டு,
மறக்கமுடியுமா அப்பா நீங்கள் செய்த தியாகத்தை.

இனியொரு பிறவி எனக்குண்டு என்றால்,
இனியொரு பிறவி எனக்குண்டு என்றால்,
எனக்கு நீங்கள் மகனாகப் பிறக்கவேண்டும் அப்பா,
உங்களுக்கான என் கடமையைச் செய்யவேண்டுமப்பா,
அதற்கு நீங்கள் என் மகனாய்ப் பிறக்கவேண்டுமப்பா,
பிறந்து அருளவேண்டுமப்பா.

கண்ணீருடன்

*சுலீ அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.