கல்வி பல கற்று, வேலையின்றி அலைந்து,
வெறுப்புகளைச் சுமந்து,
தண்டச் சோறென்று
தாயே சொன்னால்....
அது நரகம்.
விருப்பமின்றி மணந்து, விருப்பமின்றி வாழ்ந்து,
ஏனிந்த வாழ்க்கையென்று,
எதற்கிந்த வாழ்க்கையென்று, ஏங்கித் தவித்தால்....
அது நரகம்.
பிள்ளைகள் பலபெற்றும் கவனிக்க ஆளின்றி
கண்ணீரில் நனைந்து,
ஆதரவின்றி அலைந்து,
அனாதையாய் இறந்தால்...
அது நரகம்.
செல்வங்கள் பல இருந்தும்
தள்ளாத வயதினிலே நோயினால் தளர்ந்து,
வலியால் துடித்து
மரணம் வேண்டி நின்றால்...
அது நரகம்.
சொர்க்கத்தை நரகமாக,
நரகத்தைச் சொர்க்கமாக
மாற்றுவது மனமென்றால்.....
மனமே நீ மாறி விடு,
மனிதனை மாற்றிவிடு,
மகிழ்வோடு வாழ விடு,
சொர்க்கத்தைக் காட்டிவிடு.
சுலீ அனில் குமார்.