Header Ads Widget

Responsive Advertisement

மாற்றங்கள்

ஒரே இளநீரில்

இரு உறிஞ்சுக்குழல்களாய்

பார்ப்பவரின் விழிகள்  இரண்டும் மாறும்! மாறி உன்னழகைப் பரவசமாய் அருந்தும்!


நிலவின் முகம்காண மற்றவர்கள் சன்னலை நோக்க

நிலவோ உன்முகம்காண

உன்வீட்டு சன்னலைத் தேடும்!தேடி என்கர்வத்தை அடக்க இறைவன்  படைத்தானோ இவளை என்றெண்ணும்!


பூவினங்கள் யாவும் ஒன்றுகூடி

இறைவனிடம் சென்று உன்னைச் சுட்டிக்காட்டி

அந்த மலருக்கு மட்டும் பட்டாடையா?

எங்களை மட்டும் ஏவாளாய் விட்டுவிட்டீர்களே!என்று சண்டையிடும்!இட்டு

உன்னை மலரென்றே முடிவு செய்துக் கொள்ளும்!


மலர்களைத் தாலாட்டும் தென்றலோ உன்மேனியைத் தழுவிய சுகத்தில்

இறைவன்முன் ஒரு விண்ணப்பம் வைக்கும்!வைத்து

தன் இயக்க ஆற்றலை நிலைஆற்றலாய் மாற்றி உன்னைத் தழுவிய நிலையிலேயே மெய்மறக்கும்!


சூரிய சந்திரரும் பலகோடி உடுக்களையும் தன்னகத்தே கொண்ட வானமண்டலமோ உன்னைப் பார்த்து இறைவனிடம் நச்சரிக்கும்!நச்சரித்து என்னை ஏமாற்றி விட்டீர்கள்!,

மாற்றம் வேண்டும்!

முன்னைவிட நான்அதிக ஒளிபெறவேண்டும்!

அதற்கு இந்தகன்னி வேண்டும்!தருவீர்களா?எனக் கேட்கும்!


யார்நம்மீது நடந்துச்செல்வது!

ரோசாவின் மென்மையைத் தந்தபடி என்றே உன்பாதம்பட்ட மண்துகள்கள் யாவும் முண்டியடித்து தங்களுக்கும் காணும்விழி வேண்டும்!என்று இறைவனைப் பிரார்த்திக்கும்!

பிரார்த்தித்து பாதமே இத்துணைச் சிறப்பென்றால் இவள்முகம் எத்துணைச் சிறப்புடைத்தோ?அதைக் காணவேண்டாமா?என்றே பரிதவிக்கும்!


கொட்டும்மழை யாவும் உன்மீதே கொட்டவேண்டும் என ஆசைப்படும்!

ஆசைப்பட்டு உன்மீதே பட்டு

படும்போது  உன்னைத்தொடுவதனால்

தித்திக்கும் தேனாக மாறிப் பொழியும்!


இத்தனையும் கவனிக்கும் இறைவனே ஒருகணம் தடுமாறி

தானும் மயங்கி

மீண்டும்மீண்டும்

உன்னைப் பார்ப்பான்!பார்த்து

எத்துணை அழகியைப் படைத்துவிட்டேன் என்று கர்வம் கொள்வான்!


த.ஹேமாவதி

கோளூர்