Header Ads Widget

Responsive Advertisement

பொடிக்கவிதைகள்



  கோபம்

நிலவுமுகம்
அமாவாசை ஆனது
கோபம் கொண்டதால்!

     நாணம்

மறைந்துக் கிடந்த
அழகையெல்லாம்
அவள்முகம்
வெளிப்படுத்தியது
நாணம்!

       புன்னகை

மல்லிகையைப் பறிக்கவில்லை!
வாழைநாரெடுத்துத்
தொடுக்கவில்லை!
ஆனாலும்
தொடுத்த மல்லிகைச் சரத்தைக் காட்டினாள் புன்னகையாக!

     அச்சம்

வெளியே சென்ற மகள்
உரியநேரத்தில்
வீடு திரும்பவில்லை!
பெண் காவல்துறை ஆணையர்
அச்சத்தில் மூழ்கினார்!

      கோபுரம்

உயரத்தில் வேறுபட்டாலும்
எல்லா கோயில்கோபுரங்களும்
வான்நோக்கியே
நிமிர்ந்துள்ளதைப் போல்
நம் அனைவரது சிந்தனைகளும்
உயர்வை நோக்கியே இருக்கட்டும்!

      தண்டவாளம்

எத்தனை பாரமாய்
வண்டி ஓடினாலும்
சேர்ந்தே தாங்கும்
தண்டவாளம் போல்
இணைபிரியாது
குடும்ப பாரத்தைக்
கணவன் மனைவி
சேர்ந்தே சுமந்தால்
வாழ்க்கைத் தொடர்வண்டி இனிமையாய் ஓடும்!

      கிசுகிசு

கிசுகிசுவின் சத்தம்
மெல்லியதுதான்!
ஆனால் அதன்
பாதிப்பின் சத்தமோ
இடியோசையாகும்!

       வான மனிதன்

வானமும் மனிதனே!
நிலவாய்ச் சிரிக்கிறது!
நட்சத்திரங்களாய்ப்
புன்னகைக்கிறது!
இடியாய்ச் சத்தம் போடுகிறது!
மழையாய் அழவும் செய்கிறது!
இரவாய் மௌனமும் கொள்கிறது!சித்திரை வெயிலாய் வெறுப்பையும் காட்டுகிறது!

     தட்டாம்பூச்சிகள்

மழை வருவதை
முன்கூட்டியே
அறிவிக்கும் தீர்க்கதரிசிகள்!
குட்டிவிமானங்கள்
கிட்டத்தில் பறப்பதைப் போல
அழகாய்ப் பறக்கும்!
வாழுங்காலம் எவ்வளவு என்பதை விடுத்து எப்படி மகிழ்ச்சியாய் வாழ்கிறாய் என்பதில் கவனம்செலுத்து என்று பாடம்சொல்லும் ஆசிரியர்கள்!

த.ஹேமாவதி
கோளூர்