Header Ads Widget

Responsive Advertisement

மனதோடு வைத்துக்கொள் ரோசாவின் ராசாவே



அடிமைத் தளையினிலே அன்னை நாடு தவித்த போது
அங்கே அலகாபாதில்
ஆசிய சோதி உதித்தது.
செல்வச் செழிப்பினிலே குறையின்றி வளர்ந்தாலும்,
அன்னை நாட்டை நினைக்கையிலே மனம் கலங்கி நின்றது.

இந்தியாவை எங்களிடம் விட்டு விட்டு ஓடிவிடு!,
முடியாதென்றால் மூதேவி.. எங்களுக்கு விற்று விட்டு ஓடிவிடு! என்றே பறைசாற்றிய வீரம்மிக்க பரம்பரை.

சுதந்திர இந்தியாவின் பிரதமராய் நேரு.
மணல்மேட்டைக் கட்டிடமாய் கட்டி எழுப்பவேண்டும்,
எங்களுக்கும் நிர்வாகம் தெரியுமென்று காட்டவேண்டும்,
கட்டமைப்பைக் கட்டோடு மாற்றியமைக்க வேண்டும்,
சவாலாகச் சாதித்துக் காட்டிவிட்ட சாதனை.

அரசியலோடுபொருளா தாரத்தை இணைக்கிறார், அத்துடன் அறிவியலை உயர்த்திப்பிடிக்கிறார்,
அறிவியலே வளர்ச்சிக்கு அடிப்படை என்கிறார்,
'வளரும் நாடு இந்தியா' என்று வியக்கவே வைக்கிறார்.

அனுபவிப்போர் மறந்துவிட்டார் அது தானே வேதனை.
கட்டியவீட்டிற்குள் சொகுசாக அமர்ந்து கொண்டு,
கறையானாய் மாறி அதன் ஓரத்தை அரித்து விட்டு,
சரியாகக்கட்டவில்லை என்று குறை சொல்லும் ரோதனை.

அசையாத அடித்தளத்தின் ஆதாரத்தை மறந்து,
சுதந்திரத்தில் வளர்ந்தவர்கள் புழுதிவாரித் தூற்றுவார்கள்.
தியாக சோதியில் எரிந்த ஆசிய சோதியை,
புதிதாக உயர்ந்தவர்கள்
புறம் சொல்லித் திரிவார்கள்,
தன் சொத்துக்களை நாட்டிற்கு தானமாகத் தந்தவரை,
பிறர் சொத்தைத் திருடுபவர் குறைசொல்லி மகிழ்வார்கள்.

இருந்தாலும் எங்களின் ரோசாவின் ராசாவே.....
இது ஏதும் ஒரு போதும் நீ செய்த  தவறன்று,
நினைக்காதே அனைவரையும் நன்றிகெட்ட மனிதரென்று,
மனதோடுவைத்துக்கொள்...
மனதோடு வைத்துக்கொள்,
இந்தியாவில் இந்த நாளில் நாகரீகம் இதுவென்று.

*சுலீ அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி