எத்தனையோ பூக்கள் பூக்குமிந்த
பூமியிலே
எக்காலமும்
வாடாத பூக்களிவை!
என்றிவை அரும்பி
மொட்டென முகிழ்த்து மணந்தரு
மலரென பூத்தன
என அறிந்தார் யார்?
கடல்கொண்டதென்னாட்டில்
தேன்சிந்திய பூக்களிவை!
சங்கக் காலவீதியிலே
பாவலர்களின் நாவினிலே பூமாலையெனத் தொடுக்கப்பட்ட
எழிலார்ந்தப் பூக்களிவை!
மூவேந்தர் மடிதனிலே செல்வமகள்களாய்ப்
புரண்ட மலர்கள்!
இவை என்று மலர்ந்தன என்று யாரும் உணராத இயல்பினதானதாய்
இருப்பினும் இன்றும் வாடாவில்லை!கமழும் வாசத்தையும் இழக்கவில்லை!
எக்காலமும் வாடாத
தெய்வீகப் பூக்களாம் இவைதான் தமிழ்க்கொடியில் பூத்திட்ட
இருநூற்று நாற்பத்தேழென்ற
எழுத்துகள் என்ற பூக்கள்!
இப்பூக்களைக் கொய்யலாம்!மாலையாய்த் தொடுக்கலாம்!
நாமணக்க இப்பூக்களை நாவென்னும் நாவாயிலேற்றி
சொல்லென்ற பயணத்தில் உள்ளங்களை வெல்லலாம்!
த.ஹேமாவதி
கோளூர்