Header Ads Widget

Responsive Advertisement

ஊரைவிட்டே உன்னை ஒழித்திடுவோம்!

பறக்கத் தெரிந்தவன் நீ!
மனித உயிர்களைப்
பறிக்கவும் செய்பவன் நீ!
ஒருபுள்ளியே உன்னுருவம்!
ஓர்எலும்பும்  இல்லாஉடலம்!
ஆனாலும் மனிதர்களை ஆக்குகிறாய் சடலம்!
தேங்கும் நீரிலே
இனப்பெருக்கம்!
தூங்கும் மனிதரோ
உனக்கு உணவூட்டம்!
வரவேற்காமலேயே
வீட்டுக்குள் நுழைகிற விருந்தாளி நீ!
இரக்கம் இல்லாமலேயே
எங்களின் குருதியைக் குடிக்கிற கொலையாளி நீ!
குடித்த உடலுக்கே
நோய்கொடுக்கும்
செய்நன்றி மறப்பவன் நீ!
ஆங்காரமெடுத்து நீ
எங்களின் குருதியைக் குடிக்கப் பறக்கையில் எழும்பும் உனது ரீங்காரம் எங்கள் செவிகளுக்கு நாராசம்!அதனால்
எங்களின் தூக்கமோ ஆகும்நாசம்!
எப்பேர்ப்பட்ட மாவீரனும்  உனக்குப் பயந்து
வலையினில் பதுங்குகிறான்!
ஏழைபாழையோ
உன்கடித் தாங்கி
விழியைப் பிதுக்குகிறான்!
உன்னை விரட்டிட
ஆயிரம்வழிகள்
இருந்தாலும் எப்படியோ நீ
வீட்டுக்குள் நுழைகின்றாய்!
நாங்கள் விரும்பா உயிரினமே!
கொசுவென்ற பெயரை உடையவனே! கேள்!
நீரைத் தேங்கவிட மாட்டோம்!
தட்டுமுட்டுச் சாமானை நீக்கிடுவோம்!ஊரெங்கும் மருந்துகள் தெளித்திடுவோம்!
வத்திகள் ஏற்றி புகைத்திடுவோம்!
ஊரைவிட்டே உன்னை ஒழித்திடுவோம்!
ஆஹா கொசுவே!
நீயா?நானா? பார்த்திடுவோம்!விழித்துக் கொண்டோம் உன்னை ஒழித்திடவே!

த.ஹேமாவதி
கோளூர்