உங்களையும்
உடைகளையும்
பள்ளிக்கட்டிடங்களையும்
ஆர்வமாய் நாங்கள் காண
நீங்கள் எங்களை அதிசயமாய் பார்க்கின்றீர்
நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்
உலகின் முதல் அதிசயம் அம்மா
அவருடன் தினமும் கைப்பிடித்து நடந்து செல்வதும்
வழிதோறும் விழிக்கு விருந்தும்
வேடிக்கை விநோதங்களும்
மதியவேளையில் அம்மாவின் உணவு ஊட்டல்
எத்தனை ஆனந்தம்
இதை நீங்கள் அனுபவித்ததுண்டா
தாய் இப்போது எங்களை அரவணைப்பதால்
வயதானால் அவர்களை நாங்கள் அரவணைக்கின்றோம்
நாங்கள் விரும்பிய பாடம்
விரும்பிய மொழியில் படிக்கின்றோம்
பல்வகை திறமை வெளிப்படுத்த
வாய்ப்புகள் எல்லாம் தாராளம்
அதை பயன்படுத்த வைக்கும் ஆசிரியர்கள் ஏராளம்
தாய்மொழியில் தயக்கமின்றி பேசுகிறோம்
அயல்மொழி அலட்டல் எங்களுக்கில்லை
ஆசிரியரின் அன்பான கற்பித்தல்
பெற்றோரின் சுகமான அரவணைப்பு
எத்தனை சுகம்
நீங்களும் இங்கே வாருங்கள்
சேர்ந்து நாமும் பயின்றிடுவோம்
புதிய பாரதம் அமைத்திடுவோம்
பெரிய பதவியில் உள்ளோரெல்லாம்
அரசுப் பள்ளியில் படித்தோரே
கல்விச்செல்வம் அழியாச்செல்வம்
அதில் உயர்வென்ன தாழ்வென்ன
நாங்கள் படித்து பட்டம் பெற்று
சட்டங்கள் அமைத்து
கல்வியை சமமென ஆக்கிடுவோம்
தி.பத்மாசினி