நன்றி
ஓங்கிய தென்னை
தன்காலடியில்
முளைத்திருந்த
புல்லுக்கு
நன்றி சொன்னது
அது தன்தலைமீது
சுமந்திருந்த
பனித்துளியில்
தன்முகம் கண்டு
மகிழ்ந்ததற்காக!
புன்னகை
முகம் இல்லாமலேயே
புன்னகைத்தன செடிகள்
மலர்ந்த பூக்களின்
மூலம்!
தீபங்கள்
குளமென்ற
விளக்கில்
நீரே எண்ணெய்!
காம்புகளே திரிகள்!
காம்பின் முனைகளிலே அமர்ந்திருக்கும் தாமரை மொட்டுகளே எரியும் தீபங்கள்!
காதலியின் விருந்து
தன்னை
மலரச் செய்யும்
கதிரவனுக்கு
காதலியாம் தாமரை
பச்சைத் தாம்பாளத்தில்
நீர்முத்துகளைப் பரிமாறிக் காத்திருக்கிறாள்
விருந்து படைக்க!
த.ஹேமாவதி
கோளூர்