Header Ads Widget

Responsive Advertisement

சின்ன சுகங்களும் கோடி இன்பங்களும்



விடியலில் துயில்நீங்கி எழுகையில் கண்கள் கொஞ்சலாய் நம்மைக் கெஞ்சுகையில் அப்படியே தலையணையில் சாய்ந்து கண்களை இலேசாக மூடுவோமே............
அது சின்னசுகம்தான்!
ஆனால்
கோடி இன்பம்!
சோம்பலில்
உடலை முழுவில்லாய் வளைக்கையில்
உணர்ந்திடும் சுகம் சின்னதுதான் ஆனால் கோடி இன்பம்!
தொடர்வண்டிப் பயணத்தில்
நிற்கக்கூட இடமில்லா நெரிசலில் நமக்கருகில் அமர்ந்திருந்தவர்
அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கிட  எழுகையில் நாம் அமர்வோமே அது
சின்னசுகம்தான்
ஆனால்
கோடி இன்பம்!
அசதியில் கண்கள்
துயருறும்போது
இமைகளை மூடி
இருகைகளால்
பொத்தி கருமைக்குள் ஆழ்கையில் கண்களில் ஏற்படுமே சுகம் சின்னதுதான் ஆனால் கோடி இன்பம்!
நடக்கையில் திடீரென வானம்
சொரியும்  சிறுதூறலின் துளிகள் நம்தேகந் தொடுவது சின்ன சுகம்தான்
ஆனால் கோடி இன்பம்!
மெரினாவில் கால்கடுக்க மணலில் புதைந்துபுதைந்து நடந்துமுடிவில்
துள்ளிவரும் கடலலைகளில் கால்களை நனைக்கிறோமே
சின்ன சுகம்தான்
ஆனால்
கோடி இன்பம்!
தொடர்வண்டிப்
பயணத்தில்
சன்னலோர இருக்கையில்
வெளியே பார்க்கையில்
அறிமுகமில்லா குழந்தைகள் தங்கள் சிறுகைகளை அசைத்து டாடா
சொல்கையில்
உண்டாகும் சுகம்
சின்னதுதான்
ஆனால்
கோடி இன்பம்!
ஆறுதல் தேடித்
தவிக்கையில்
அருகிலிருக்கும்
நட்பின் தோளில்
சாய்ந்திடுகையில்
சின்னசுகம்தான்
ஆனால்
கோடி இன்பம்!

த.ஹேமாவதி
கோளூர்