அரியானா மாநிலத்தின் பயணிகள் பேருந்து...
இருக்கையில் இருக்கிறார்கள் இளம் பெண்கள் மூவர்,
இடமின்றித்தவிக்கிறார் நிற்கின்ற ஒரு மூதாட்டி,
இடம் கொடுக்கச் சொன்னார்கள் இளைஞர்கள் மூவர்,
தாங்குமா இன்றைய இளைய சமுதாயம்?
'தவறாக நடந்தார்கள்' சொன்னார்கள் பெண்கள்,
தர்ம அடி அடித்தார்கள் அதில் இரண்டு பெண்கள்,
படம்பிடித்து அனுப்புகிறாள் உடன் இருந்த தோழி.
பாலியல் தொல்லை என்ற வார்த்தை ஆகிவிட்டது தொல்லை,
பகுத்தறிந்து பார்ப்பதற்கோ யாரும் தயாரில்லை,
பள்ளியிலே ஆசிரியரைப் பழிவாங்க வேண்டுமா?
பதவியில் இருப்பவர்கள் தலைகுனிய வேண்டுமா?
துணைநிற்கும் வார்த்தை தான் பாலியல் தொல்லை.
கொதித்தெழுந்தனர் ஊடகக் கோமாளிகள்,
காறி உமிழ்ந்தன இளைஞர்கள் மீது,
'பாலியல் பலாத்காரம்' பாடித்திரிந்தன,
அடிகொடுத்த பெண்களுக்கோ 'வீரமங்கை' பட்டம்,
அடிவாங்கிய இளசுகள்க்கோ அவமானம் மிச்சம்.
பதறித்துடித்தனர் பேருந்தின் பயணிகள்,
கண்ணீரில் நனைகிறாள் காரணமான பாட்டி,
சாட்சி சொல்ல படையெடுத்தார் மனசாட்சியோடு,
உண்மையை உணர்ந்தது உணர்வற்ற சமூகம்,
பெண்களின் பாதுகாவலர் போன்று நடிக்கின்ற சமூகம்,
தவறைத்திருத்த முயலவில்லை தவறிழைத்த ஊடகம்,
தலைகுனிந்தே நிற்கிறார்கள் இளைஞர்கள் மூவரும்,
தரம் கெட்ட மூவரினால் தகுதியிழந்த மூவரும்,
தரமற்ற ஊடகத்தால் பாதிப்படைந்த மூவரும்.
பட்ட அவமானம் மறையத்தான் போகிறதா?
தூற்றிய மக்கள் இனி போற்றப்போகிறார்களா?
யார் தருவார் அவர்களுக்கு இழந்து நிற்கும் மானத்தை?
எவர்தருவார் இழந்துவிட்ட நாட்களைத் திருப்பி?
எது தணிக்கும் அவர்களது மனதின் கொந்தளிப்பை?
*சுலீ. அனில் குமார்
*கே எல் கே கும்முடிப்பூண்டி.
( மூன்று இளைஞர்கள் நிரபராதிகள் என்பது கண்டறியப்பட்டது...பத்திரிகைச் செய்தி).