காலையிலே பள்ளி செல்ல வாகனத்தை எடுத்தேன், எதிர்வந்து நின்றார் எதிர் வீட்டு நண்பர்.
'மருமகளுக்குச் சீமந்தம்,மறக்காமல்
வந்திடுங்கள்'
மகிழ்ச்சியோடு பத்திரிகை தந்தபின் சொன்னார்,
'வீட்டிலே நீங்கள் யாருமே இல்லை, அதனால் தான் வீட்டில் வந்து சொல்ல முடியவில்லை.'
சிரிப்புடனே சொன்னவர் திரும்பியே போக, திரும்பிப் பார்க்கிறேன் நான் எனக்குள்ளே என்னை.
காலையிலே ஆரம்பித்து ஓடுகின்ற ஓட்டம், இரவினிலே முடிகிறது வீடுசேர்ந்த பின்னே.
பக்கத்தில் இருப்பவரைப் பார்க்கமுடிவதில்லை,
நண்பர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதில்லை,
உடல்நலனைப் பேணவேண்டும் என்றும் எண்ணமில்லை,
உறவுகளைப் பார்ப்பதற்குக் கூட நேரமில்லை.
போகும் இடம் வெகுதூரம் அது தெரியும் எனக்கு,
முடிக்க வேலை ஏராளம் புரிகிறது எனக்கு.
துணைக்கு வேறு ஆளுமில்லை அதுகூட நிஜம் தான்.
இருந்தாலும்....
எதற்காக இந்த ஓட்டம் சொல்லத் தெரியவில்லை,
எத்தனை நாள் இந்த ஓட்டம் அதுவும் தெரியவில்லை.
ஓடுகின்றோம் ஓடுகின்றோம் ஓய்வெடுக்காமல்,
ஓய்ந்துபோனபின்...
ஓயந்து போனபின் இங்கு யார் இருப்பார் துணைக்கு?
சுலீ. அனில் குமார்
கே எல் கே கும்முடிப்பூண்டி.