Header Ads Widget

Responsive Advertisement

தாழம்பூவே - த. ஹேமாவதி



தஞ்சாவூர்க் கதம்பத்தின் முடிசூடா இராணியே!
கொஞ்சுகின்ற தென்றலுக்கு இளங்காதலி நீயே!
இயற்கையென்னும்
இளங்கன்னியின்
மேனிக்கு நீதானே
வாசனைதிரவியம்!
சிலுசிலுக்கும் தென்றலும்  உன்வாசத்தால் பூபாளம் பாடும்
புதுஇராகம் கொண்டு!
நீயிருக்க வாசத்திற்கேது பஞ்சம்!
நீதானே நாகம் படுத்துறங்கும் மஞ்சம்!
உன்வாசத்திற்கு
உண்டோ மயங்காத நெஞ்சம்?
கோடிமலர்க் குவியலிலே நீமட்டுமே வாசத்தின் உச்சம்!
மற்றமலர்களுக்கும் வாசம் உண்டென்றால் அது உனது மிச்சம்!
அழகுப்போட்டி கூட உனக்கொரு துச்சம்!
ஏனென்றால் நீயும்தான் எழில்தோகை கொண்ட மயிலின் பிம்பம்!
மற்றமலர் யாவும் அழகைச் சுமந்திருக்க
நீமட்டும்தானே பெண்களின் விழிமுனை போன்ற
கூர்முனையால் மொழிபேசுவாய்!
கொண்டையிலே நீயமர்ந்தால்
பெண்கள் மேனியெல்லாம் உன்வாசம் கமழும்!
வசீகர ஆற்றல்  தானாகவே பெண்களுக்குக் கூடும்!
தேகத்தின் வெப்பத்தைத் தணிக்கின்ற அருமருந்து நீ!
சூலுற்ற மாதர்க்குக் காப்பாகும் அருமலர் நீ!
குலமாதர் குங்குமத்தில் வாசம் செய்கிறாய்!
இதமான ஊதுவத்தியாய் நறுமணம் கமழ்கின்றாய்!
வாழும்போதே
மணக்க மணக்க
மயங்க வைக்கிறாய்!
*தாழம்பூவே!*
தாளாத ஆசை
உன்மீது கொண்டோரில்
நானும் ஒருத்தி!

த.ஹேமாவதி
கோளூர்