Header Ads Widget

Responsive Advertisement

தேசிய காவலர் தின கவிதை - கிராத்தூரான்


(அக்டோபர் 21, தேசிய காவலர் தினம்)

*அனைத்து காவலர்களுக்கும் சமர்ப்பணம்.*

மிடுக்கான உடையும் எடுப்பான நடையும்
ஆராய்ந்து பார்க்கும் அலைபாயும் கண்களும்
நேரமும் காலமும் பாராத உழைப்பும்
நின்று கொண்டே செல்பவரைக் காப்பாற்றும் பொறுப்பும்
கடமையை சிரசு மேல் கொள்கின்ற மாண்பும்
காவலர் என்றதும் கண்முன்னே நிற்கும்.

நல்ல நாள் கெட்ட நாள் என்பதும் இல்லை
குடும்பத்து நிகழ்ச்சிகள் இவர்களுக்கோ எல்லை
திருவிழா நாளிலும் தெருவிலே நிற்பார்
தேருக்கும் பாருக்கும் காவலாய் நிற்பார்
தலையற்ற முண்டமும் உடம்பில்லாத் தலையும்
காவலர் காவலில் கவலையற்று இருக்கும்.

அரசியல் பகடையில் காய்களும் இவரே
ஆபத்தில் காத்திடும் பலியாடும் இவரே
கண்ணியம் தவறிடும் களைகளோ சிலரே
கடமைக்காய் உயிரையும் கொடுப்போரோ பலரே
ஊர்வலம் என்றதும் நினைவினில் இவரே
வெயிலிலும் மழையிலும் துணையாய்க் காவலரே.

ஆண்மையற்ற ஆண்கள் சிலர் தவறிழைத்து விட்டால்
ஆண் இனத்தைப் பழித்து மகிழும் வக்கிர மனம் போலே
எங்கோ சில காவலர்கள் எட்டப்பராய் ஆனால்
பழித்து நிற்பர் பழி சுமத்திப் பழக்கப்பட்டவர்கள்
அனைத்தையும் பொறுத்தவாறே கடமையைச் செய்வோரே
காவலரே காலமெல்லாம் பணியால் சிறப்பீரே.

*கிராத்தூரான்*