Header Ads Widget

Responsive Advertisement

மாட்டுப்பொங்கல் மகிமை


மாட்டுப் பொங்கல் மகிமை

விவசாயி - ஒரு கவிஞன்

கவிஞனைப் போலே கருத்திய லாளன்
கற்பனை வளத்திலே கவிஞனை மிஞ்சுவான்
கவிஞன் மையாலே கவிதை எழுதுவான்
காராளும் விவசாயிக்கு கலப்பைதான் எழுதுகோல்
கோடுகள் கோடல்ல; கொஞ்சுதமிழ் கவிதைகள்
தடமெல்லாம் எழுத்துகள் விதையெல்லாம் புள்ளிகள்
கவிதைகள் பிழையானால் கழனியில் களையெடுப்பான்
விவசாயம் காவியம் வேதத்தை மிஞ்சும்
வேளாண்மை காப்பியம் விஞ்ஞானமும் கெஞ்சும்
மழைவளம் குறைய மன்னுயிர் குறையும்
கவிதைவளம் குறைய மொழிவளம் குறையும்
கலப்பையின் கோடுகள் வறுமைக் கோடுகளா?
ஆனதற்குக் காரணம் அறிவியல் கேடுகளா?
வழக்கில் இல்லாதது வாழ்க்கைக்கு உதவாதா?
வழக்கே வாழ்க்கை என்றால் வாழ்வேது?
உழைப்பே வாழ்க்கை என்றால் ஓய்வேது?
சமுதாயம் இனியேலும் மாறத்தான் வேண்டும்
இனியவழி இயற்கைவழி என்றநிலை வேண்டும்
கலப்பையின் கோடுகளை கவிதையெனக் கொள்வோம்
கோடுகள் பசியென்ற கேடுகளைக் களையும்
கோடாத நிலைகண்டால் கேடுகள் பெருகும்
உழவர் திருநாள் தமிழர் திருநாள்
தமிழன் தமிழைத்தான் மறந்து விட்டான்
உழவை மறந்துண்டு வாழ்வது சரியா?
பெருமைகள் தானழிந்து சாவது முறையா?

- கவிஞர் டில்லிபாபு