சிம்மக்குரலோன் வசனம் கேட்டால்,
முன்னாள் முதல்வர் பாடலைக் கேட்டால்
நாட்டியப்பேரொளி நாட்டியம் பார்த்தால்
டி எம் எஸ்ஸின் குரலைக் கேட்டால்
இன்னும் கொஞ்சம் என்றது மனது.
இசைஞானி இசைத்த இன்னிசை கேட்டால்
ஜேசுதாஸின் குரலிசைகேட்டால்
சின்னக்குயிலின் குயிலிசை கேட்டால்
எஸ் பி பியின் பாடலைக் கேட்டால்
இன்னும் கொஞ்சம் என்றது மனது.
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன்
ஐந்து பாகம் முடித்தே விட்டேன்
இன்னும் கொஞ்சம் என்றது மனது.
சாண்டில்யன் தன் கடல்புறா படித்தேன்
யவனராணியை மீண்டும் படித்தேன்
இன்னும் கொஞ்சம் என்றது மனது.
புரட்சிக் கவிஞன் கவிதைகள் படித்தேன்
மீண்டும் மீண்டும் அதையே நினைத்தேன்
இன்னும் இன்னும் என்றது மனது.
கவியரசர் எழுதிய பலதையும் இரசித்தேன்
பட்டுக்கோட்டையார் தத்துவம் ருசித்தேன்
இன்னும் கொஞ்சம் என்றது மனது.
போதுமென்ற மனத்தை அடையமுடியவில்லை
ஆசையை அடக்கி இருக்கமுடியவில்லை
ஆவலாய் உள்ளம் தேடி நிற்கிறது
இன்னும் கொஞ்சம், இன்னமும் கொஞ்சம்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*