Header Ads Widget

Responsive Advertisement

பிரிவு



ஒளியின் அருமை
இருளில் தெரியும்!
உறவின் அருமை
பிரிவில் தெரியும்!
பிரிவென்றாலே
துன்பம் என்றில்லை!இன்பமும் உண்டு பிரிவினிலே!
கருவறைவிட்டுப் பிரிந்தால்தானே பிறப்பென்பது சாத்தியம்!
அல்லியாம் காதலியை விட்டுச்
சந்திரன் பிரிந்தால்தானே நமக்கெல்லாம் புதுவிடியல்!
மரங்களைவிட்டுப் பிரிந்தால்தானே கனிகளும் அதனுள் விதைகளும் பிறந்தபயன் அடையும்!
விழிகளை இமைகள் பிரியவில்லையெனில்
காட்சிகளேது வாழ்வினிலே?
இரட்டைக்கதவாம் உதடுகள் இரண்டும்
பிரிந்தால்தானே மொழி பிறக்கும்!
பறவைக் குஞ்சுகளும் விலங்கின் குட்டிகளும் தாயைவிட்டுப் பிரிக்கப்படும்போதுதான்
சுயமாய் வாழும்வித்தையை உணர்ந்திடும்!
திரைகடலோடியும் திரவியம் தேடுதல்
குடும்பத்தை விட்டுப்பிரியும் தியாகத்தாலன்றோ
சாத்தியம்?         பிரிவு என்பது கண்ணகிக்குத் துன்பத்தையும் கோவலனுக்கு
மாதவியென்ற இன்பத்தையும் தந்தது முற்பகலில்!
அதே பிரிவு
மாதவிக்குத் துறவையும் கண்ணகிக்கு பத்தினிதெய்வம் என்றபட்டத்தையும்
கோவலனுக்கு கொலைத்  தண்டனையையும்
கொடுத்தது பிற்பகலில்!
மணிமேகலையின் பிரிவால் உதயகுமாரன் அடைந்த இன்னல்கள் எத்தனை?
சீவகசிந்தாமணியில்
எதிரிகளின் சூழ்ச்சியால் மன்னன் சச்சந்தனைப் பிரிந்து மயிற்போறியிலேற்றி
விடப்பட்ட  விசயை
சுடுகாட்டில் விழுந்து
பிரசவவலியால் துடித்து மகன் சீவகனைப் பெற்று
அரண்மனையைப் பிரிந்து சுடுகாட்டில்வந்து பிறந்தநிலையை எண்ணி நொந்து இதுவோ மன்னர்க்கியல் வேந்தே என்று அழுதாளே!
வளையாபதியிலும்
பிரிவு வருகிறது
நாயகன் நவகோடிநாராயணன்
பிறகுல மங்கையை மணந்ததால் அக்குலத்தவர் எதிர்ப்பால் நாயகியைப் பிரிந்து அயல்தாடு செல்ல
தன்னந்தனியே இவள் கருவறைநிறைந்தப்
பெண்ணாய் வாட
மகன்பிறந்து வளர்ந்து பெரியவனானதும்
தந்தையைத் தாயுடன் சேர்த்து வைக்கிறான்!
குண்டலகேசியிலும்
பிரிவு வருகிறதே!
திருடன் எனத்தெரியாது காதலித்து மணந்த காளனை மந்திரிகுமாரி பத்திரை
தன்னைஅவன் கொல்ல முயற்சிக்கையில்
தானே அவனைக் கொன்று அவன்பிரிவைத் தாங்காது பௌத்தத்துறவியாகிறாளே!
கம்பனும் கண்டான்
இராமனுக்கும் தந்தை தசரதனுக்கும்  இடையே பிரிவை!
இராமனுக்கும் மனைவி சீதைக்கும் இராவணனால் ஏற்பட்ட பிரிவை!
இராமனுக்கும்
அவன் மக்கள் இலவ குசன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரிவை!
பிரிவென்ற காலத்தைக் கம்பன் சுந்தரக்காண்டமாய்
நம்கையில் தந்தான்!
இன்றைய வாழ்விலும் எத்தனைப் பிரிவுகள்?
மணமுடித்துக் கணவன்வுடு செல்கையில் பெண்ணின் பிரிவு பெற்றோர்க்கு!
அலுவலகம் செல்லும் பெண்களுக்கு இல்லம்திரும்பும் வரை குழந்தைகளின் பிரிவு!
பொருளீட்ட அயல்நாடு சென்றவர்களின் குழந்தைகளுக்கு அன்புத்தந்தையின் பிரிவு!
கூட்டுக்குடும்பத்தை விட்டுப்பிரிந்து தனிக்குடும்பம் ஆனதால் தாத்தா பாட்டிகளின் பிரிவு!
அடுக்குமாடிக் குடியிருப்புகளால்
உறவுகளின் பிரிவு!
நகரமயமாதலால் கிராமங்களின் பிரிவு!
மரங்களை வெட்டுவதால் மழையின் பிரிவு!
நெகிழிகளின் பயன்பாட்டால் மண்ணின் வளம்பிரிவு!
ஆங்கிலமோகத்தின்
விளைவு மெல்லமெல்ல உருவாகும் தமிழின் பிரிவு!
காலத்தின் நியதியால் ஏற்படும்
மரணங்களால் பாசமான உறவுகளின் இழப்பென்னும் ஈடுசெய்யமுடியாத
துன்பப் பிரிவு!
எல்லாம் ஆடிஅடங்கிய பிறகு
நாம் காணும் பிரிவு நம்முடலை விட்டு நம்முயிர் பிரிவதுதான்!

த.ஹேமாவதி
கோளூர்