பழையன கழிதலும்
புதியன புகுதலும்
அறிந்த மரங்கள் இவை!
காலமெல்லாம் உழைத்த இலைகள்
பசுமைஇழந்து மஞ்சளாய்ப் பழுத்து
தன்னால் இனி மரத்திற்குப் பயனில்லை என்று
முதிர்ந்த இலைகள் யாவும் கீழே வீழும்!
அவை விழுந்த இடந்தனிலே
புத்தம்புதிதாய் கொஞ்சும்கிளியின்
இளம்பச்சை நிறமாய்
இலைகள் துளிர்க்கும்!
மரத்தின் கிளைகள்தோறும்
பிரசவம் நடந்ததோ என்பது போல
புதிதுபுதிதாய் இலைகள் பிறக்கும்!
மரமே அழகாய் காட்சி அளிக்கும்!
கோடைவெயிலின் வெம்மையை ஈடுகட்ட மரங்கள் யாவும் சிகைநீக்கம்
செய்துக் கொள்ளும்!
இலைகளை இழந்து
மொட்டைக் கிளைகளாய் காற்றோடு பேசிக் கிடக்கும்!
பண்டிகை தினங்களில் ஏழைக் குடும்பங்களில் சின்னக்குழந்தை
குளித்து முடித்து
பழந்துணி அணிய மறுத்து புதுத்துணி
கேட்டு அம்மணமாய்
அடம்பிடிப்பதைப் போலவே
பெரிய பெரிய மரங்களெல்லாம்
ஆண்டவனிடம்
புத்தம்புது இலைகள் வேண்டி
பழைய இலைகளை
அவிழ்த்து உதறி
அடம்பிடித்து நிற்கும்!
காய்ந்த இலைகள் உதிர்ந்தாலும் அவை இருந்த இடங்களின் அடையாளம் அழியாததுபோல
மனிதரின் நினைவுகளிலும்
சில நீங்கும்!
சில சேரும்!
இலையுதிர்காலம் என்பது மரங்களின்
தவக்காலம்!
தவக்காலங்கள் ஒருபோதும் தோல்வியில் முடிவதில்லை!
த.ஹேமாவதி
கோளூர்