பணம் படைத்தவர் பலரும் குணம் தொலைத்தவர்களாக துள்ளி நடப்பதைப் பார்த்து,
ஆட்சி செய்பவர்கள் பெரிதும் சூழ்ச்சி செய்பவர்களாக
மாறி இருப்பதைப் பார்த்து,
தகுதி படைத்தவர்தனையே தரமிழந்தவர்கள் பலரும் வசைபாடித் திரிவதைப் பார்த்து,
கல்விகற்கும் வயதினிலே கத்தி தூக்கி அலையும் இளைய தலைமுறையைப் பார்த்து
செய்வதென்ன என்று தெரியாமல் பலநேரம் மௌனமாக நின்றிருந்தேன் நானும்.
லஞ்சத்தில் உழல்பவர்கள் வஞ்சகர்களாக மாறிப்
பிறரைப் பழி பேசுவதைப் பார்த்து,
கிம்பளத்தில் திளைப்பவர்கள் சம்பளம் வாங்கிப் பிழைப்பவரை
எள்ளி நகையாடுவதைப் பார்த்து,
நாட்டு மக்கள் வாழ்வை விட
வீட்டுமக்கள் வாழ்வையே நினைத்து வாழும் தலைமையைப் பார்த்து,
ஊழலிலே உழன்றுவிட்டு உழைப்பவரை ஓடவிட்டு
மகிழ்ந்து நிற்கும் மனிதர்களைப் பார்த்து,
காலம் அது மாறாதா? என்ற கேள்விக்கணையுடனும்
மாறியே தீரும் என்ற நம்பிக்கையுடனும்
மௌனமாக நின்றிருந்தேன் நானும்,
மனம் நிறைய வலியுடனே நானும்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*