கடற்கரை சென்ற நான்
கடலலை கண்டேன்,
கடலை இரசித்த நான்
கடலையும் தின்றேன்.
விடலைகள் விளையாட்டில்
என்னையே மறந்தேன்,
குழந்தைகள் குளிப்பதைக்
குழந்தையாய்ப் இரசித்தேன்.
இணையுடனும், துணையுடனும் இருப்பவரைக் கண்டேன்,
இணைபிரியா இணைகள் இவர்
என எண்ணி நான் நின்றேன்.
அந்தநேரம் பார்த்து வந்தது அலைபேசியின் சிணுங்கல்,
அழைப்பு வந்த அலைபேசியை எடுத்து அவள் சொன்னாள்,
'சிறப்புவகுப்பு முடிந்ததம்மா கிளம்புகிறேன்' என்று.
அதிர்ந்தபடி நான் நிற்க அடுத்த இடி காதில்,
'இந்த அம்மாவே இப்படித்தான் எப்பவுமே தொல்லை'.
தொல்லை என்று நினைக்கின்ற நீ இன்று பிள்ளை,
அன்னை மனது புரிய நீயும் ஆகவேண்டும் அன்னை.
சத்தமின்றி சொல்லிவிட்டு நகர்ந்து வந்தேன் நானும்.
மனதை விட்டு மாறாமல் தொடரலையாய் வருகிறது, நினைவலையில் தொடர்கிறது, வேதனையைக் கொடுக்கிறது
*என் மாலை நேர கடற்கரை* நினைவுகள் இன்றும்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*