ஆசிரியர்
ஏற்றுவார் இல்லாமல் எந்தவிளக்கும் தானாக எரிவதில்லை!
ஆசிரியர் வழிகாட்டுதல் இல்லாமல் எந்த மாணவனும் அறிவொளி பெறுவதில்லை!
மாணாக்கன்
காற்றுக்குப் பணிந்த நாணல் வீழ்வதில்லை!
ஆசானுக்குப்
பணிந்த மாணாக்கன்
வாழ்வில் தாழ்வதில்லை!
பள்ளிக்கூடம்
மாணவர்கள் என்ற பட்டாம்பூச்சிகள்
வண்ணச்சிறகடித்து
கல்வித்தேன் பருகிட கூடுகின்ற
அறிவுமலர்ச் சோலை!
குடும்பம்
அன்பென்ற நாரால்
கட்டப் பட்டமாலை!
ஆணும் பெண்ணும்
இணைந்து மழலைக் காவியம்
படைக்கும் மேடை!
தேசமென்ற மரத்திற்கு வேர்களே குடும்பங்கள்!
கண்ணியம்
பக்கத்து பக்கத்தில்
இருந்தாலும்
மரங்கள் தங்களுக்குள் சண்டையிடுவதில்லை
பக்கத்து வீட்டாரிடம்
இணக்கமாய் இருப்போம்
விலைஉயர்ந்த சேலை
அம்பானி வீட்டுப் பெண்கள் அணியும் தங்கச்சேலையின் முந்தானையை விட
கசங்கிய நூலாலான என்தாயின் சேலைமுந்தானை ஆகிடுமா என்ன?
அளவுகோல்
நேரத்தை அளக்கும்
அளவுகோல் கடிகாரம்!
தூரத்தை அளக்க
நாடாஅளவுகோல்!
மனிதனின் மனத்தை அளக்கும்
அளவுகோல் அவனது முகமே!
அகத்தின் அழகு
முகம்தானே காட்டும்!
பங்கு
சின்னவயதில் மிட்டாயை
சரிபாதியாய்ப்
பங்குபோட்டு
உண்டு மகிழ்ந்த
அண்ணனும் தம்பியும்
பெரியவர்களானதும்
வீட்டின் பாகப்பிரிவினையில்
மோதிக் கொண்டார்கள்!
த.ஹேமாவதி
கோளூர்