சூரிய ஒளி
பாகுபாடின்றி பொதுவாய் எல்லாவற்றின்மீதும்
விழுவது போலவே
தீபாவளி அனைவருக்கும் பொதுவாய் வருகிறது.
அதன் கிரணங்களின் தாக்கத்தால் குடும்பங்களின் நிலையோ எத்தனைஎத்தனை விதமாகிறது!,
செல்வத்தில் புரளும் குடும்பங்களில் தீபாவளிக்கு இராசவரவேற்பு!
பட்டாடைகளில்
நெய்ப்பண்டங்களில்
பட்டாசு மத்தாப்புகளில்
தங்கநகைகளில்
தீபாவளி அங்கே குதூகலப்படும்!
ஏழைகளின் குடும்பங்களில்
என்னைப்பிடி
உன்னைப்பிடி என்று தலைவனும் தலைவியும்
கணக்குப் போட்டு இருப்பை அறிந்நு
தனக்கில்லா விட்டாலும் தன்குழந்தைகட்கு
விடிவதற்குள்
புதுச்சட்டையும்
நாலு பட்டாசும்
எப்பாடு பட்டாவது
வாங்கத் துடிக்கும்
தலைவனும் தலைவியும் கொண்டவீடுகளில்
தீபாவளியே
இரக்கப்பட்டு உள்ளேநுழையும்!
நடுத்தரக் குடும்பங்களிலோ
ஆடம்பரமில்லா விட்டாலும்
அலங்காரமாய்
தீபாவளி அரங்கேறும்.
குடும்பத்தலைவனின்
உழைப்பாலே
கிட்டிய பணத்தின் துணையாலே
மனைவியின் சாதுரியத்தாலே
சீரும்சிக்கனமாயும்
பிள்ளைகளின்
மகிழ்ச்சியை
மையமாகக் கொண்டு யாவும்
நலமாய் நடக்கும்!
பொறுப்பற்ற
தலைவனும் தலைவியும் உள்ள குடும்பங்களில்
தீபாவளி
வருவதும் தெரியாது!போவதும் தெரியாது!
அடித்தட்டில் இருக்கும் குடும்பங்களிலும்
தீபாவளி நடக்கும்.
அன்புமனங்கொண்டோர்
உதவிசெய்தால்
அவர்களின் தீபாவளியும் வண்ணச்சரவெடியாய்
வெடிக்கும்!
பொதுவான ஒன்று!
பண்டிகைகளின் மகிழ்ச்சி நம்கையிலே உள்ளது.
பணமல்ல முக்கியம்!
மனப்பக்குவமே முக்கியம்!
குடும்பத்தின் ஒற்றுமையோ அதைவிட முக்கியம்!
எல்லா குடும்பத்தினர்களுக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துகள்!
தஹேமாவதி
கோளூர்