மனிதரில் ஏனோ இத்தனைவகை?
மென்மையாய் இனிமையாய் புன்னகையைச் சுமந்தே சொற்களைப் பேசுவோர் ஒருவகை! இதற்கு எதிரணியாய் வன்மையாய் கசந்தே சினந்துச் சொற்களை வீசுவோர் ஒருவகை
ஏன் இந்த இருவகை என ஆழ்ந்து யோசிக்கையில் கணவர் வாங்கிவந்த காய்கறிகளை நோட்டமிட்டதில் ஆங்கே பாகற்காயும் சீனிக்கிழங்கும் என்னைப் பார்த்துச் சிரித்தன!
பாகற்காய் சொல்லியது நான் கசந்தாலும் உடலுக்கு மருந்தாவேன்! என்னை அறவே ஒதுக்கமுடியாது!அளவோடு உங்கள் உணவில் நானுமிருப்பேன்!
தொடர்ந்து சீனிக்கிழங்கும் சொல்லியது!
நான் இனிப்பானவன். என்னையும் சிலர் ஒதுக்குவார்கள் உடம்பில் சர்க்கரை அளவு அதிகமாகுமே என்ற பயத்தால்!
அப்போது எனக்கு ஓர்உண்மை புலப்பட்டது.
பாகற்காயும் சீனிக்கிழங்கையும் போலத்தான்
இறைவன் இந்த மனிதர்களைப் படைத்துவிட்டான். கசந்துப் பேசுபவனையும் அடியோடு ஒதுக்கமுடியாது. இவர்களால்தான்
இனிக்கப் பேசுபவனின் மதிப்பு பன்மடங்கு உயர்கிறது!
வாழ்வில் இருவகை மனிதர்களையும் கடந்துதான் போகவேண்டியுள்ளது
சீனிக்கிழங்கு மனிதர்களிடம் நெருங்கிப் பழகுவதும் பாகற்காய் மனிதர்களிடம் அளவோடு பழகுவதும் பெரிதல்ல நாம் மற்றவர்களுக்கு
பாகற்காயா? சீனிக்கிழங்கா?
எப்படியிருக்கிறோம்
என்பதே முக்கியம்.
த.ஹேமாவதி
கோளூர்