Header Ads Widget

Responsive Advertisement

புயல்

புயலொன்னு வந்துபுட்டா

புழுதியோட முடியுமுன்னு

நெனச்சதுண்டுநெனக்கலியே

மரமெல்லாம் மடியுமுன்னு...


ஆடுமாடு கோழிகன்னு

அத்தனையும் போயிடுச்சி

அதிகாலை பொழுதெனக்கு

அஸ்தமனம் ஆயிடுச்சி...


"வானத்த பாத்துநின்னு

மானத்த காக்கும்தென்ன"_              

எனும் 

ஞானத்த ஊமையாக்கி

ஊனத்த தந்திடுச்சே...


நிமிந்த உனப்பாத்து

நிமிந்து நடந்தேன்_ இப்ப

இப்படிநீ விழுந்துகெடக்க

எப்படிநான் எழுந்துநடக்க...


கதருசட்ட போடவச்ச

கம்பீரமா ஏத்திவிட்ட

சிதருதேங்கா போலயிப்ப

சீக்காளியா மாத்திபுட்ட


வச்ச மரமெல்லாம்

வாரிசா நின்னுச்சி

ஒத்தக் காத்துவந்து

ஊரையே தின்னுச்சி


'பொத்துன்னு' சத்தத்துக்கு_ ரூபா

பத்துன்னு கணக்குவச்சேன்

- மரங்கள்

மொத்துன்னு விழுந்துபுட்டு -கெடந்து

கத்துன்னு விட்டுருச்சே...


விழுந்த மட்டைகூட

குடிசைக்கு சட்டையாச்சி

-தென்ன

இருந்த இடமெல்லாம் 

பழநி மொட்டையாச்சி...


இளநீரு வெட்டும்முறை

எங்களிடம் இல்லஇல்ல

-ஏன்னா

குறமாச பிரசவம்

பொன்னுக்கு நல்லதல்ல...



வேர்கொண்ட இடத்தினிலே

தலைவச்சு படுத்திட்டியே

கூர்கொண்ட ஈட்டியில

எனைவச்சு அழுத்திட்டியே...


புயலுன்னு சொன்னதநான்

புரளின்னு இருந்ததுக்கு

அடியோட அழிச்சிபோற

அரளி மருந்தெதுக்கு....


பைபாசு ரோட்டகூட

புரட்டி போட்டபுயல்

பைனான்சு நோட்டமட்டும்

பத்திரமா விட்டுருச்சே...


பெத்தப்புள்ள விட்டாலும்

வச்சப்புள்ள காப்பாத்தும்

வச்சப்புள்ள வாழாம 

இனி

எந்தப்புள்ள கஞ்சிஊத்தும்?... 



இவண். யு. கண்ணன்   ஆசிரியர், 

பேராவூரணி.