மாதவி:
பார்த்த நொடியிலேயே அவனிடம் நான் தொலைந்ததேனோ?
கைகள் இரண்டும் சிறகாகி விண்ணில் பறக்கவைப்பதுமேனோ?
தேகம் ஒன்றிருப்பதே நான் மறந்ததேனோ?
இதயம் பனியாய் உருகிப் பிரவாகமெடுத்துப் பொங்கிப் புதுவெள்ளமெனப் பெருகி கடல்நாடும் நதியாய் அவன் மனம்நாடிப் பாய்வதுமேனோ?
கால்கள் இருப்பதை மறந்து காற்றில் மிதக்கிறேன்!
இமைகள் மூடாமலே உறங்கவும் செய்கிறேன்!
உறக்கம் கொள்ளாமலேயே
கனவுகள் காண்கிறேன்!
இளந்தென்றல் எனக்கு கனத்த போர்வையாய் ஆனதேனோ?
அந்த பால்நிலவும் எனக்கு தணலானதேனோ?
ஓ.............அவனிடம் காதலில் விழுந்துவிட்டேனோ?
கோவலன்:
விழுந்தது உண்மை!
ஆனால்
விழுந்தது நீயல்ல பெண்ணே! நான்தான் கண்ணே!
சிலையொன்று உயிர்க்கொண்டு நடனமாடக் கண்டு
சிலையாகச் சமைந்தேன்!உன் கை பட்டால்தான் மீண்டும் உயிராக எழுவேனோ?
உன் கண்ணசைவில் பொம்மலாட்டமாய்
ஆட்டுகிறாய் என்னை!
உன்விழிமொழியும்
காலின் விரல்மொழியும்
புன்னகைக்கையில்
எழில்சேர்க்கும்
உன் கன்னத்தின்
குழிமொழியும்
புதிதாகக் கற்கின்ற
மாணவனானேன்
இன்று!
தேர்ச்சிப் பெற வைப்பாயா நன்று!
கண்ணகி;
இல்லந் திரும்பவில்லை!
ஆனால்
உள்ளம் நீங்கவில்லை!
ஞாயிறு காணாத
தாமரை ஆனேனே!
முன்னர் அவர்மொழி கேட்ட என்செவிகள்
இப்போது ஏங்குகிறதே அவர்மொழி கேட்க!
முன்னர்
அவர் முகம்பார்த்த
என்விழிகள்
பொம்மைகேட்டு
அடம்பிடிக்கும்
சிறுபிள்ளையாய்
அவர்வேண்டும் என்றே புரண்டு அழுகிறதே!
நாங்கள் துயின்ற மஞ்சம்கூட
என்மீது இரக்கங் கொண்டு
அதுவும் தன்னுறக்கம் இழந்து அவர்காலடியோசைக்காக
வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறதே!
என் செய்வேன் இனி நானே!
த.ஹேமாவதி
கோளூர்