Header Ads Widget

Responsive Advertisement

அப்போது தான் தெரிந்தது - அனில் குமார்



காய்ந்து போய்க் கிடந்தது ஆங்கே ஓர் ஏரி
சாய்ந்து போய்க் கிடந்தன அருகிலே மரங்கள்
காலங்கள் பலவாகப் பெய்யவில்லை மாரி
காட்சிகள் தெரிந்தது கோலங்கள் மாறி.

புதிதாகக் காண்பவர்க்கு அது வெறும் மைதானம்
பிள்ளைகள் விளையாடும் விளையாட்டு மைதானம்.
திடீரென்று உருவானது புதிதாய் ஒரு தெரு அங்கே
அரசியல்வாதி ஒருவரின்
பெயரிலே ஒரு தெரு அங்கே.

எதிர்ப்புக் குரலோடு குவிந்தனர் பலர் அங்கே
கூடாது கூடாது அழித்து விடும் என்றார்கள்
அரசியல்வாதிகளோ ஒருதரப்பில் குவிந்தார்கள்
அதிகாரவர்க்கமும்
அவர்க்குதவி நின்றார்கள்.

குடில்தானே கட்டுகின்றார் ஏன் அதை மறுக்கவேண்டும்
உருவாகும் புதுத்தெருவை எதற்காகத் தடுக்கவேண்டும்
ஏழைக்கும் தானே உறங்க ஓர் குடில் வேண்டும்
பிறருக்காய் கலங்குகின்ற என் மனமும் கேட்டது.

அதிகாரவர்க்கம் தான் இறுதியிலே வென்றது
குடில்கள் எல்லாம் வீடாக ஓராண்டில் உயர்ந்தது
திடீரென்ற கனமழையில் வெள்ளம் வந்து சூழ்ந்தது
உறங்கிவிட்ட பலபேரின் உயிரை அது பறித்தது.

தப்பாக நான் புரிந்தது அப்போதுதான் தெரிந்தது
கொலையா? அது தற்கொலையா?
மனம் கேள்வி கேட்டது
அதை நினைத்தால் இன்று கூட என் இதயம் துடிக்குது
உருவாக்கிய அந்தக் கும்பல்...
உருவாக்கிய அந்தக் கும்பல்
இன்னோர் ஏரியில் நிக்குது.

*சுலீ. அனில் குமார்*