Header Ads Widget

Responsive Advertisement

பனிவிழும் என் மனம்



மலர் போன்ற என் மனம் மலரத்தான் செய்தது
நிலவவள் வருகையை எதிர்பார்த்து நின்றது
நிலவு வரும் முன்னாலே பனித்துளிகள் விழுந்தது
பனித்துளியோ குளிர்ச்சியுடன் மகிழ்ச்சியையும் தந்தது.

மகிழ்ச்சியிலே திளைக்கையிலே நேரமும் கடந்தது
காத்திருப்போ கனவுகளால் தனிமையைக் கரைத்தது
விழுந்துவிட்ட பனித்துளிகள் உறைபனியும் ஆனது
உறைந்துவிட்ட பனித்திரளுள் மலர்மனம் மறைந்தது.

நிலவு வந்த வேளையிலோ 
மலர் மறைந்து விட்டது
குரல் கொடுக்க முடியாமல் பனிக்குள்ளே தவித்தது
எதிர்பார்த்த முழுநிலவோ சோகத்தில் நனைந்தது 
சோகமே மேகமாகி நிலவையே மறைத்தது.

நேரத்தில் நிலவுவந்தால்
பனிக்குள் மலர் மறையுமா?
மறைந்துவிட்ட பின்னாலே எதிர்பார்க்க முடியுமா?
பனியுருகும் நேரம் வரை நிலவுகாத்திருக்குமா?
நிலவுதனைக் காத்திருக்க பகலோன் அனுமதிக்குமா?

காலத்தின் வேகத்தில் காத்திருப்பு பலிக்குமா?
காத்திருந்தால் மலரழகு  நிலைத்தும் தான் இருக்குமா?
பனிபடர்ந்த மலர்மனமோ  நிலவைத்  தான் காணுமா?
நிலவு வரும் காலம் வரை....
நிலவு வரும் காலம் வரை
மலர் உதிராதிருக்குமா?

*சுலீ. அனில் குமார்.*