Header Ads Widget

Responsive Advertisement

மண்பானை - ஹேமாவதி

*மண்பானை*

குயவனின் கண்பட்டு கைபட்டு
பதம்பார்த்து
கால்பட்டு பிசையப்பட்டு
பூவாக மென்மையாக்கப் பட்டு
அச்சாணியில் வைத்து சுழலப்பட்டு
கண்ணும் கருத்தும் கோக்கப் பட்டு
விரல்களால் வனையப்பட்டு
அழகான உருவம் ஆக மாற்றப்பட்டு
சூளையிலே வேகப்பட்டு வண்டியிலே ஏற்றப்பட்டு சந்தையிலே விற்கப்பட்டு என்கைகளிலே வந்துவிட்ட பானையே என்மனதை மகிழவைக்கும் மண்பானையே
உந்தன் ஆதிஅந்தம் சொல்லவோ?
ஆதிமனிதனாம் தமிழனே உருவாக்கினான் முதன்முதல் உன்னை!
செம்பானை கரும்பானை என்று இருவகைகள் உன்னில் உண்டு!
பிறப்பு முதல் இறப்பு வரை பானையே
நீயின்றி எங்கள் வாழ்வுதான் இல்லையே!
பணம்கொட்டி வாங்கிய குளிர்பதனப்பெட்டி தாராத குளிர்ந்த குடிநீரைத் தருகிறாய்!
உன்னுள் ஊற்றிடும்
நீருக்கு உடலை நலமாக்கும் மந்திரத்தைத் தருகின்றாய்!
வேணிற்காலமதில்
மக்களின் காதலை
நிரம்பவே பெறுகிறாய்!
தவித்த வாய்க்கு ஒருகுவளை மண்பானைத் தண்ணீர் என்பது
கொடுத்துவைத்தவர்களுக்கே கிட்டும்!
மேனி முழுக்க ஓட்டை
இருப்பினும் உன்னுள் கொட்டிய நீரினை எளிதில் சிந்துவதில்லை!
தமிழனின் பண்பாட்டை எளிதில் பானை சொல்லும்!
பழமொழி தன்னிலும் பானை வலம் வரும்!
*மாமியார் உடைத்தால் மண்பானை!மருமகள் உடைத்தால் தங்கப்பானை!*
கடையில் இருக்கும்வரைதான்
நீ மண்பானை!
வீட்டிற்கு வந்த பிறகோ நீ
தண்ணீர்ப் பானை!
பால் பானை!
தயிர்ப்பானை!
மோர்ப் பானை!
வெண்ணெய்ப் பானை!
நெய்ப் பானை!
அரிசிப் பானை!
வெல்லப் பானை!
புளிப் பானை!
சோற்றுப் பானை!
குழம்புப் பானை!
ஊறுகாய்ப் பானை!
உப்புப் பானை!
அம்மாடி!
பெண்ணைப் போல உனக்கும்தான்
எத்தனை பெயர்கள்!
ஏழைகள்வீட்டில் இயல்பாக இருக்கும் மண்பானைகள் செல்வந்தர் வீடுகளில் ஆச்சரியமாய் இருக்கும்!
அகழ்வாராய்ச்சியில்
கிடைத்திடும் உனது மூதாதையர்களின்
மேனியின் உடைந்த ஓடுகளில்தான்
எத்துணை பண்பாடுகளை எங்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டுகிறாய்!
உடைந்த பானை ஒட்டாததுதான் ஆனால் பானையே
உந்தன் நினைவுகள் எங்கள் மனதோடு என்றுமே ஓட்டிக்கொண்டும் தொட்டுக்கொண்டும்
உறவாடிக் கொண்டேயிருக்கும்!

த.ஹேமாவதி
கோளூர்