Header Ads Widget

Responsive Advertisement

மண்பானை - அனில் குமார்

*மண்பானை*

வெளியில் நின்று வருபவர்கள் கால் கழுவி அனல் தணித்து
சுத்தமுடன்  குளிர்ச்சியுடன் உள்நுழைய உதவி நிற்கும்
வாசலிலே வாஞ்சையுடன் ஏழை வீட்டில் மண்பானை.

வீட்டிற்குள் நுழைந்த உடன் வெட்டிவேர் வாசத்துடன்
உடல் குளிர மனம் குளிர தண்ணீரைக் குடிக்கவைத்து
அடக்கமுடன் அமர்ந்திருக்கும் ஓரத்தில் மண்பானை.

உலைகொதித்து மணம்பரப்பி உண்ணவா ஓடிவா என்று ஆசை காட்டி ஆவல் கூட்டி பாசத்தைக் காட்டிநிற்கும்
பண்பதனை இழக்காத பாட்டி கால மண்பானை.

சூடதனைத் தான் தாங்கி தணுப்பதனை உள்வாங்கி
மடியினிலே கஞ்சி தாங்கி அதனையும் குளிர்ச்சியாக்கி
உறியினிலே ஆடி நிற்கும்  மகிழ்ச்சியுடன் மண்பானை.

புறமெங்கும் கரியாக உள் பாகம் சரியாக உழைப்பவனின் உன்னதத்தை எடுத்துக்காட்டி உணர்த்தி நிற்கும் 
மண்ணுக்கு உயிர்தந்து குயவன் செய்த மண்பானை.

மேலிருக்கும் சட்டிகளைக் கீழிருந்து தாங்கி நின்று
பிள்ளைகளைத் தாங்கி நிற்கும் தாயவளை நினைக்கவைத்து
தாய்ப் பானை ஆகிவிடும் தாய்போன்ற மண்பானை.

உடைந்து சிதறிப் போனபின்னும் உருப்படாமல் போகவில்லை
ஓடாகத் தேய்ந்தபின்னும் உதவியாய்நான் உடன்வருவேன்
என்று பாண்டி ஓடாய் மாறிவிடும் தியாகியான மண்பானை.

உண்பதற்கும் குடிப்பதற்கும் காப்பதற்கும் களிப்பதற்கும்
உடனிருந்து உதவிசெய்து வளர்ந்துவிட்ட பின்னாலே
மறக்கப்பட்ட மனிதர் போலே  மறக்கத்தெரிந்த மனிதராலே
மறக்கப்பட்டு மறைந்து போன மற்றோர் பொருள் மண்பானை.

*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*