Header Ads Widget

Responsive Advertisement

மனிதநேயம் மலரட்டும்



அண்டை வீட்டாருடன் நேயமே இல்லாத போது
எப்படி வளரும் மனிதநேயம்

பெற்றோரிடத்தில் நேயம் காட்ட முடியாத போது
அயலானிடத்தில் மட்டும் எப்படி மனித நேயம் காட்ட முடியும்

மனிதநேயமென்பது
அதிக செலவழித்து படிக்க வைப்பதோ
அதிக பண உதவி செய்வதோ இல்லை

பாசமான பார்வையும்
பரிவான பேச்சும்
அன்பான அரவணைப்பும் கூட மனிதநேயம் தான்


முடியாத முதியவருக்கு
முடிந்த வரை உதவுதல்

பார்வையற்று பாரில் உள்ள மக்களுக்கு உதவுதல்

வீதியிலே உலா வரும் அழுக்குற்ற
பிள்ளைகளுக்கு உணவளித்தல்

கர்ப்பிணிப் பெண்களோ
முடியாத முதியவர்களுக்கோ
பேருந்தில்
இடமளித்தலும்
மனிதநேயம் தான்


விபத்தில் அடிப்பட்டு
அலறிக் கொண்டிருப்பவரை
மருத்துவமனைக்குஅனுப்பாமல்
செல்பி எடுக்கும் விந்தை உகம்
மனித நேயமெங்கே

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே
தெரியாமல்
கைப்பேசியில் மூழ்கி கிடக்கும் காலமாயிற்று

ஆழிப் பேரலையும்
ஒக்கியும் கஜாவும்
சூறாவளியும் புயலும்
வந்தால் தான்
மனிதநேயம் பூ பூக்குமோ

பருவத்திற்கேற்ப மலர
மனிதநேயம் மல்லிகையும் அல்ல

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர
குறிஞ்சியுமல்ல

பூமியின் ஊற்றைப் போல்
மனிதருக்குள் தானாக ஊற்றெடுக்க வேண்டும்

மனிதநேயத்தை வளர்க்க முடியாது
அது ஒவ்வொருவருக்குள்ளும்இருக்கின்றது
வெளிக்கொணர மறுக்கின்றோம்

மனிதநேயம் மலர
மாற்றம்  ஒன்றே போதும்
பிறரையும் தம்மைப்போல் நினைத்தாலே போதும்

குழந்தைகள் கையில் செல்போன் கொடுப்பதை தவிர்த்து
தனிமையை வெறுத்து கூட்டுக் குடும்பத்தை நேசிக்க பழக்குங்கள்

அன்னை தெரேசாவையும் காந்தியையும் கற்பியுங்கள்

விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையை சொல்லிக் கொடுங்கள்

மனிதநேயம் அங்கிருந்தே ஆரம்பமாகட்டும்

தி.பத்மாசினி